திங்கள், ஏப்ரல் 18, 2016

புலால் மறுத்தல் (அதிகாரம் 026)




        நான் கடைப்பிடிக்காத ஒன்றை என் எழுத்தில் சொல்வதில்லை. குறைந்த பட்சம், எண்ண-ஓட்டத்தில் இருக்கும் விடயங்களைத்தான் நான் எழுதுவேன். சில நட்புகள் பரிந்துரை செய்வது போல், சொல்ல முனையும் விடயத்தை கதையாய் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தான் "10 வரியில் ஒரு கதை" என்றோர் பிரிவைத் துவங்கியும், பின் அதில் தொடர்ந்து எந்த பதிவையும் எழுத என் மனம் ஒப்பவில்லை. நகைச்சுவை பகுதியான "ச்சும்மா, தமாஷா..." என்ற பிரிவில் கூட, என் வாழ்வில் நிகழ்ந்தவற்றைத் தான் எழுதி இருக்கிறேன். நகைச்சுவையில் கூட, கற்பனை கலந்து; நடக்காத ஒன்றைப் பற்றி எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. உடன்பாடில்லாத விடயத்தை, எக்காரணத்துக்காகவும் செய்யக்கூடாது என்பது என் நிலைப்பாடுகளில் ஒன்று. அதுதான், திரு. கலாபவன் மணி அவர்களின் மரணம் குறித்து - பலரும் "தவறாய் விமர்சித்ததை"ப் பற்றிய பதிவின் அடிப்படையும்/நோக்கமும். 

       மதுவின் உண்மையான பாதிப்பை நான் "தெளிவாய்" உணர்ந்திருந்தும், குறைந்தது நான் மதுவை நிறுத்தி ஓராண்டு கழித்து தான் அதை எழுதவேண்டும் என்ற உறுதியும், இந்த நிலைப்பாட்டால் விளைந்ததே. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் பணியையும் அவ்வாறே மேற்கொண்டு வருகிறேன். ஓரிரு விடயங்கள் தவிர, இதுவரை விளக்கவுரை எழுதிய 25 அதிகாரங்களிலும் - நான் எதிலும் முரண்படவில்லை. புரளி-பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை எனினும், நானும் அம்மாதிரி பேசி இருக்கிறேன் என்பதைக் கூட - நெடுநாட்களுக்கு முன்பே பதிந்து இருக்கிறேன். இது, திட்டமிட்டதல்ல; என் செயல்கள், என் சிந்தனையைத் தழுவியே இருக்கின்றன என்பதாலேயே இது சாத்தியமாகி இருக்கிறது. என் சிந்தனை தவறென்று தெரிந்தவுடனேயே, அதை சரிசெய்து - செயல்களை நேர்படுத்தும் திறம் எனக்கு இயல்பிலேயே இருப்பதும் இதற்கோர் பெரிய பலம். திருக்குறளை எழுதியது நம் பெருந்தகை ஆயினும்...

         விளக்கவுரை எழுதுவதிலும் - ஓர் நேர்மையும்/உண்மையும் இருக்கவேண்டும் என்பதில் மிக உறுதியாய் இருக்கிறேன். என் விளக்கவுரை, பெரிதளவில் பிரபலம் ஆகவில்லை என்பது தெரியும்! அதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இப்பணியை என் கடமையாய் செய்கிறேன்; அதை இந்த வலைப்பதிவின் மூலம் பகிர்கிறேன். காலம் கடந்தேனும், இது பலரையும் சென்று சேரக்கூடும்; இல்லையெனினும், என் பணி என் மூச்சிருக்கும் வரை தொடரும். என் நட்புகளும் "குறளும் கோவல் நட்பும்" என்ற வாட்ஸ்-ஆப் குழுவில், என் குறைகளை சரியாய் சுட்டிக்காட்டி; என்னை சரிசெய்து கொள்ள உதவுகிறார்கள். அவர்களின் முனைப்பு,  என்னை  மேலும் முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்ள தூண்டுகிறது. அந்த வகையில், அதிகாரம் 26-இற்கான விளக்கவுரைக்கான வரைவு எழுத முனைந்த போது, என்னுள் பெருத்த தடுமாற்றம்! நான் எப்படி இதற்கு விளக்கவுரை எழுதுவது? சமைத்தது என்றால், எல்லா விலங்கையும்/உயிரையும் உண்பவன் ஆயிற்றே?!...

        உனக்கென்னடா அருகதை இருக்கிறது? - மனம் கேள்வி கேட்டது. மற்ற நாட்டினர் பலர் என்னிடம் "நீ இந்து ஆயிற்றே?! நீ மாட்டிறைச்சி உண்கிறாயே?!" என்று கேட்பர். எந்த தயக்கமும் இன்றி நான் இதுவரை கூறிய பதில் - "சாப்பிடுவது என்று முடிவெடுத்த பின், எந்த உயிர் என்ற பாகுபாடு ஏன்?!" என்பதே. ஆம், பன்றி-இறைச்சி துவங்கி; இங்கே வந்தபின் "ஒட்டக-இறைச்சி" வரை எந்த பாகுபாடும் எனக்கு இருந்ததில்லை! இவை மட்டுமல்ல; அணில்/வயல்-எலி/உடும்பு/காக்கை - இப்படி மேலும் பலவகையான இறைச்சியையும் உண்டிருக்கிறேன். இடையில் "ஸ்ரீ இராகவேந்திரர்" மேலிருந்த பக்தியால் 8 ஆண்டுகள் அசைவம் உண்ணாமல் இருந்திருக்கிறேன். பின், மீண்டும் 1991-இல் அசைவம் உண்ண ஆரம்பித்தேன்; நிறுத்தியதும்/ஆரம்பித்ததும் ஆழ்ந்த சிந்தனையால் நடக்கவில்லை. ஒரு மேலோட்டமான எண்ணத்தில் எழுந்த செயல் வடிவங்களே அவை! இந்த அதிகாரத்தைப் பற்றி முன்பே தெரிந்திருந்தும், என் எழுத்தில்... 

           விளக்கவுரை எழுத அமர்ந்தபோது - மனம் பல கேள்விகள் கேட்டது. விளக்கவுரைப் பணியை ஆரம்பித்த பின், ஒரு குறளுக்கான விளக்கவுரையை குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே "முதல் வரைவு" எழுதுவது வழக்கம். ஆனால், குறள் எண் 0251-இற்கான விளக்கவுரையை என்னால் அப்படி எழுத முடியவில்லை. நான் இறைச்சி உண்பதை நிறுத்திய பின்தான் எழுதவேண்டும்! என்ற உறுதி கொண்டேன்.  முடியுமா?! என்ற கேள்வி எழுந்தது! ஏன் முடியாது? என்ற எதிர்கேள்வியும் எழுந்தது. ஏன் இப்படி? நிறுத்தவேண்டும் என்று முடிவெடுத்த பின், உடனடியாய் நிறுத்தமுடியாதா?! நிச்சயம் முடியும்; ஆனால் தொடர்வது கடினம்!!" என்பது புகைத்தல்/மது - பழக்கங்களை பலமுறை நிறுத்த முனைந்து/தோற்ற எனக்கு நன்றாகத் தெரியும். இம்மாதிரியான நிறுத்தல்கள் ஆழ்ந்த சிந்தனையின் விளைவாய் இருக்கவேண்டும்! என்பது என் புரிதல்/அனுபவம். சரி, உடலின் வலிமைக்கு "புரதம் (Protein)" தேவையாயிற்றே?! - முட்டையாவது சாப்பிடலாமா?!...

    என்றோர் குழப்பம் எழுந்தது. ஆம், புரதம் முக்கியமாயிற்றே?! ஏன், அதற்கு மாற்று இருக்கவேண்டுமே?! இருக்கிறதா? - ஆராய்ந்தேன்; நண்பரிடம் கேட்டேன். "சோயா" போன்ற தானியங்களில் புரதம் இருப்பது தெரிந்தது. அடடே... பின் என்ன? சோயா உனக்கு மிகவும் பிடித்த ஒன்றாயிற்றே - மனம் தைரியம் சொன்னது. பிறகென்ன? மனதிடமும் மேலும் பெருகியது. நிறுத்துவது குறித்தான கவலை அனைத்தும் அகன்றது. எல்லா கேள்விகளும்/விடைகளும்; ஒரு வார கால இடைவெளியில் என்னுள் நிகழ்ந்தன. இறைச்சியை நிறுத்துவது என்ற உறுதியான முடிவு ஏற்பட்டது. அதன்படி, இறுதியாய் 0250-இற்கான விளக்கவுரையை பதிந்த இரவு - இறைச்சி உண்டுவிட்டு; அடுத்த நாள்தான் 0251-இற்கான விளக்கவுரையை எழுத ஆரம்பித்தேன். மனம் உற்சாகமாய் இருந்ததால், அன்று காலையிலேயே இந்த அதிகாரத்தில் 7 குறள்களுக்கு விளக்கவுரையை விரைந்து எழுதினேன். வழக்கத்திற்கும் மாறாய், அதிவிரைவில்...
  
      "நிகர்விளக்கமும்" உதித்தன. நிச்சயம், இனி இறைச்சி உண்ணும் பழக்கம் தொடராது என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்தப் பதிவைக் கூட "நிறுத்திய" அன்றே எழுதாமல், சில நாட்கள் கழித்து எழுதி; இந்த அதிகாரம் முடியும் இன்றுதான் பதிகிறேன். இன்றுடன் 10 நாட்கள் தான் ஆகின்றன எனினும்; என் நிலைப்பாட்டில், மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நம் பெருந்தகையின் அருள், என்னைத் தடம்புரளாமல் இட்டுச்செல்லும் என்ற திண்ணமும் இருக்கிறது. நம் பெருந்தகையின் பொதுமறையை, இப்படி அனுபவிக்க வேண்டும்! என்பதே என் விருப்பம். எல்லா விடயங்களும் சாத்தியமா?! என்றால்; நிச்சயமாய் சொல்ல முடியவில்லை. ஏனெனில், இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும். ஆனால், வெகுநிச்சயமாய் - நான் கடைப்பிடிக்காத விடயங்களை; கடைப்பிடிக்க முயல்வேன். எல்லாவற்றையும் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே என் நிலைப்பாடு! இல்லையேல், முடிந்தவற்றையாவது கடைப்பிடிக்கவேண்டும் என்ற... 

       வைராக்கியம் நிறைந்திருக்கிறது; பார்ப்போம். "புலால் உண்பது தவறு!" என்று பலரையும் போல் மேலோட்டமாய் சொல்லவில்லை நம் பெருந்தகை. அவருக்கே உரித்தான வகையில், அதை ஆழ சென்று சாட்டையால் அடித்து சொல்லி இருக்கிறார்.  முதல் குறளான 0251-ஐக் கவனியுங்கள். "தன்னூன் பெருக்கற்கு தான்பிறிது ஊனுண்பான்" என்று ஆரம்பிக்கிறார்! அட... அட... அட... சற்று பேச்சுத் தமிழில் சொல்லவேண்டும் எனில் "தான் ஒடம்ப வளக்கறதுக்கு; இன்னொரு ஒடம்ப தின்னுறவங்க" என்று சொல்லி இருக்கிறார். இப்படிப் பேச்சுத் தமிழில் நினைத்துப் பார்த்தாலேயே; அதன் ஆழம் புரியும். அத்துடன் நிற்கவில்லை! தொடர்ந்து "அப்படி உண்பது, எப்படி அருள் ஆகும்?!" என்று வினவி முடித்திருக்கிறார். இதுதான், நம் பெருந்தகையின் அனுபவத்தின்/சிந்தனையின் ஆழம். அதை முழுமையாய் உள்வாங்குவது தான் குறளைப் புரிந்து கொள்வதாகும். அதைக் கடைப்பிடிக்கப் பழகும் முன், முதலில், அவர் சொன்ன/சொல்ல முனைவதன்... 

            ஆழத்தை உள்வாங்கவேண்டும். அப்படி உள்வாங்கப் பழகினாலே போதும்! நிச்சயம், நம்முள் பல மாற்றங்கள் நிகழும். திருக்குறளை மனனம் செய்வதில் எனக்கு எந்த நம்பிக்கையும்/உடன்பாடில்லை. அதனாலேயே, அப்படி எவரும் மனனம் செய்து ஒப்பிப்பதைப் பார்த்து - நான் பெரிதும் வியப்பதில்லை. இது ஆணவம் அல்ல! அவர்களின் "மனனத் திறனை" அவமதிக்கும் செயல் அல்ல! அந்த மனனத் திறனை நான் நிச்சயம் மதிக்கிறேன். ஆனால், வெறும் மனனம் செய்து படிக்கும் கல்வியே; எந்தப் பயனையும் அளிக்காது என்பதைக் கூட பதிந்திருக்கிறேன். கல்வி என்பது மனனம் செய்து ஒப்பித்தலல்ல; அது படித்ததை உள்வாங்கி, புரிந்துகொண்டு செயலில்/வேலையில் பிரதிபலிப்பது. திருக்குறளும் அதுபோலவே! திருக்குறளை அறிவதென்பது, அதை படித்து ஒப்பித்தல் அல்ல; படித்ததை உள்வாங்கி, புரிந்துகொண்டு வாழ்வியலில்/சிந்தனையில் பிரதிபலிபப்து. எனவே, திருக்குறளை ஆழ உணர்வதே முக்கியம். என்னளவில்...

1330 குறள்களை மனனம் செய்ய முயல்வதை விட; 
சிலவற்றையாவது வாழ்வியலில்/சிந்தனையில் பிரதிபலித்தலே மகத்தானது!!!

பின்குறிப்பு: மேலே உள்ள புகைப்படங்கள், இறைச்சி உண்பதை நிறுத்தியது முதல், பெரும்பான்மையில் நான் உண்ணும் உணவுமுறை. வழக்கம்போல், நானே சமைத்தவை தான். இடையில் இரண்டு முறை, உணவுவிடுதியில் சைவ உணவுகளைச் சாப்பிட்டேன். சமைப்பதில் - குறிப்பாய், சைவ உணவைச் சமைப்பதிலும் - எனக்கெந்த சிரமமும் இல்லை. என்னுடைய சமையல் திறன் பற்றி கூட முன்பே பதிந்திருக்கிறேன்; ஒருவேளை, அந்த கலையை கற்றதெல்லாம் - தனிமையில் இருக்கும் என் வாழ்க்கைச் சூழலில் - இம்மாதிரியான வேளையில் கைகொடுக்கத் தானோ?! அப்படித்தான் இருக்கவேண்டும்; "Chaos Theory" போல், வாழ்வில் தொடர்பில்லாத விடயங்களே இல்லைதானே?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக