புதன், ஜூலை 06, 2016

மது-அருந்துவதன் உண்மையான விளைவு...


      மது-அருந்துவதால் ஒருவரின்: 1) உடல்நிலை கெடுகிறது, 2) அவரின் குடும்ப மகிழ்ச்சி கெடுகிறது, 3) அவரைச் சார்ந்தோரின் வாழ்வியல் கெடுகிறது - என்பன போன்றவையே பொதுப் பார்வையில் இருக்கும் குற்றச்சாட்டுகள். மது அருந்துவதால், மேற்குறிப்பிட்டன போன்ற விளைவுகள் உருவாவதை நான் மறுக்கவில்லை. அதைவிட வேறொரு விளைவு - சமுதாய சீர்கேட்டை - பெருக்கும் வண்ணம் நிகழ்கிறது; அதைப் பற்றிய என் பார்வையைப் பகிர்வதே இந்த தலையங்கத்தில் நோக்கம். அதற்கு முன், பொதுப் பார்வையில் இருக்கும் சில குறைகளை விரிவாய் பார்ப்போம். முதலில் மது அருந்தாத பிரிவினர், மது அருந்துவோரை "குடிகாரர்கள்" என்று ஏளனமாய் பேசுவது. வேலைசெய்வோர் "வேலைக்காரர்கள்" என்ற அடிப்படையில், இந்த சொல்லை நான் குறையாய் பார்க்கவில்லை. ஆனால், அதிலிருக்கும் தோரணையை/ஆணவத்தை தான் நான் தவறென சுட்டிக்காட்டுகிறேன். குடிப்பது மட்டுமே தவறான செயல்...

           என்ற மாயையில் இருக்கிறது அவர்களின் பேச்சு. உண்மையில், அவரவர் மனதில் இருக்கும் அழுக்குகளை அவரவரின் உள்மனம் நன்கறியும். அதையும் தாண்டி, இப்படி மற்றவர்களை "குடிகாரர்கள்" என்று அகந்தையில் விளிப்பதைத்தான், நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும், குடிப்பவர்களை - பொருளாதார அடிப்படையில் கடைநிலையில் இருப்போர் குடிப்பது; இடைநிலை மற்றும் மேல்தட்டு வர்க்கத்தில் இருப்போர் குடிப்பது - என்று வேறுபடுத்தி பார்க்கின்றனர்; இதுவொரு இரட்டை நிலைப்பாடு. மது அருந்துதல் தவறெனில் - எவர் செய்தாலும் தவறுதானே? அதிலெங்கே பொருளாதாரத் தரம் வருகிறது? மது அருந்தும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே எண்ணம் - மகிழ்ச்சி எனும் மாயையே! நிலையில்லா இவ்வுலகில் மகிழ்ச்சி/ஆனந்தம் போன்ற விடயங்கள் எல்லாமே மாயை - அவை நிரந்தரமல்ல. ஆனந்தம் என்ற அந்த மாயைக்கு பல காரணிகள் உள்ளன - அதில் ஒன்றுதான் மது. அந்த காரணியை...

     பொருளாதாரத்தை வைத்த்து எப்படி வரையறுக்க முடியும்? இதையடுத்தது பெருமளவில் சொல்லப்படுவது - சாலை விபத்துகள்! இல்லை எனவில்லை... மது அருந்திய பின் எழும் அந்த "ஆனந்தம் எனும் மாயை" விபத்துக்கு ஓர் கூடுதல் காரணியாய் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், தலைக்கவசம் அணியவேண்டும் என்பதை மட்டும் நாம் ஒன்றுபட்டு மறுக்கிறோம். சாலை விபத்துகளுக்கு பின்னால் இருக்கும் பல்வகை காரணிகளில் - மது அருந்திவிட்டு ஓட்டுவதும் ஓர் காரணம். இயல்பிலிருந்து மாறுபட்ட - கோபம்/காழ்ப்புணர்வு போன்றவை - போன்ற எந்த உணர்ச்சியில், வாகனத்தை ஓட்டினாலும் - சாலை விபத்துக்கான வாய்ப்பு அதிகமே! சாலை விதிகளை நாம் எப்படியெல்லாம் மீறுகிறோம் எனபதை சாலை (வீ/வி)திகள்... என்ற தலைப்பில் முன்பே இரண்டு தலையங்கங்கள் எழுதி இருக்கிறேன் {மேலும் தெரிந்துகொள்ள, இணைப்புகளை சொடுக்கவும்}. எனவே, மிகைப்படுத்தப்பட்ட அளவில் சாலை விபத்துகளுக்கு காரணம்...

        மது அருந்துதல் என்ற வாதத்திலும் வலுவான காரணம் இருப்பதாய் நான் பார்க்கவில்லை. அதுபோல், மது அருந்தும் ஒருவர் இறந்துவிட்டால் - உடனே மதுவால் தான் அவர் இறந்துவிட்டார் என்று எதையும் யோசிக்காமல் வாதம் வைக்கின்றனர். சமீபத்தில் ஒரு பிரபல திரைப்பட நடிகர் இறந்தபோது எழுந்த அப்படிப்பட்ட வாதங்களை மறுத்து ஒரு தலையங்கம் எழுதி இருந்தேன். அதில் குறிப்பிட்டிருந்த படி, மது அருந்துவதில் இருக்கும் உண்மையான விளைவைப் பற்றி எழுத எனக்கான காலத்தை எடுத்துக் கொண்டேன். நான் மது அருந்துவதை நிறுத்தி - சென்ற சூன் 17 ஆம் தேதி - ஓராண்டு நிறைவுற்றது. மதுவை நிறுத்திய பின் - ஓராண்டாவது கழித்து தான் இந்த தலையங்கத்தை எழுதவேண்டும் என்பது - எனக்கு நானே வகுத்துக்கொண்ட நிபந்தனை. அதை எடுத்துரைக்கும் தகுதி, எனக்கு இப்போது இருப்பதாய் நம்புகிறேன். என் பார்வை, பிறரைப் போல் நான் குடிக்காதவன் என்ற ஆணவத்தை மையப்படுத்தியது அல்ல; மாறாய்...

      இது என் அனுபவம். எவ்வளவு மது அருந்துகிறோம் என்பது முக்கியமில்லை - எவ்வளவு அருந்தினாலும், மது அருந்துவோர்க்கு உண்டாகும் "உடனடி மற்றும் பெரிய விளைவு" - ஒருவரின் சிந்தனைத் திறன் குறைவது அல்லது அழிவது தான். மேற்குறிப்பிட்ட படி, பலரும் வைக்கும் வாதங்களுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் - இந்த சிந்தனை அழிவுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பெரும்பான்மையில் எவரும் - அந்த அழிவை உணர்ந்து சொல்வதில்லை என்பதே வேதனை. அவர்களின் வாதங்களுக்குப் பின்னால் - தாம் மது அருந்துவதில்லை என்ற கர்வமே தலைதூக்கி இருக்கிறது. மாறாய், மது அருந்துவோர் தம் சிந்தனையை இழப்பது குறித்தான கவலை - பெரும்பான்மையில், இவர்கள் எவருக்கும் இல்லை! ஏனனில், அந்த புரிதலே அவர்களுக்கு இல்லை. மேற்குறிப்பிட்ட வாதங்களை விட, மிக அதிகமான விளைவு - ஒரு தனி மனிதனின் சிந்தனை அழிவுதான். சிந்தனை என்பது...

            மனித குலத்திற்கு மட்டும் கிடைத்திருக்கும் மாபெரும் சக்தி. இந்த சிந்தனையின் ஆதிமூலம் தேடலில் துவங்குகிறது. மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு பின்னாலும் - இந்த தேடலும்/சிந்தனையும் தான் முதன்மை வகிக்கிறது. அவைதான், புரிதலை நோக்கி மனிதர்களை நகர்த்துகிறது; அந்த புரிதல் தான் தேவையற்றவற்றை ஒழித்து, தேவையானவற்றை வளர்த்து - வளர்ச்சியை நோக்கி மனிதனை உந்துகிறது. எனவே, ஒரு தனிமனிதனின் சிந்தனை - ஒரு சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த அடிப்படையில் - மது அருந்துதல், ஒரு தனி மனிதனின் சிந்தனையை அழித்து - சமுதாய அழிவுக்குக் காரணமாகிறது. இதுதான் மிகப்பெரிய விளைவு/அழிவு. இதைக் கருத்தில் கொண்டு எவரும் வாதிடுவதாய், எனக்கு தெரியவில்லை. மேலும், மது மட்டுமே ஒரு மனிதனின் சிந்தனை அழிவுக்கு காரணம் அல்ல - அதுவும் ஓர் காரணம்; அவ்வளவே. இயல்பான மனித-சிந்தனை சமுதாய சிந்தனையை ஒட்டியே இருக்கும்.

      தற்காலிக மகிழ்சசி/வசதிக்காக - விவாசாய நிலங்களை அழித்து; பல சொத்துக்களைக் குவிப்பதில், துவங்குகிறது தனிமனித சிந்தனை மற்றும் சமுதாயத்தின் அழிவு. வீட்டின் விலையுயர்வை யார் நிர்ணயிக்கிறார்கள்?... என்ற என் தலையங்கம் கூட - இந்த தனிமனித சிந்தனை மற்றும் சமுதாய அழிவை மையப்படுத்தியதுதான். இவை போன்றவற்றில் துவங்கும் சிந்தனை அழிவுதான் - என் உயிரே முக்கியம்! சமுதாயத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன?? - என்ற அளவுக்கு வளர்ந்து, ஒரு இளம்பெண் துடிதுடித்து சாகும்போது; நம்மை செயலற்று இருக்க வைக்கிறது. இந்த சிந்தனை அழிவு தான் - நான் மட்டுமா செய்கிறேன்? எல்லோரும் தானே செயகிறார்கள்? - என்ற தவறான புரிதலோடு, அறத்தை மறுக்கச் செய்கிறது. இந்த அடிப்படையில் தான், தேடல்/சிந்தனை/புரிதல் பற்றி நான் அதிகம் பேசிக் காரணம். என் நட்பு வட்டங்கள் கூட - "ஏன்டா எப்ப பார்த்தாலும், அதையே பேசிக்கொண்டு இருக்க?"...

           என்று கடிந்து கொள்வதுண்டு. தனிமனிதனாய், நம் ஒருவரின் சிந்தனை அழிவு - ஒரு சமுதாய அழிவிற்கு வித்திடுகிறது என்பதை உணரவேண்டும் என்பதால்தான்; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இதைக் குறிப்பிட்டு வலியுறுத்தி வருகிறேன். தனி மனிதனின் சிந்தனை, சமுதாயத்தோடு தொடர்புடையதால் தான் மனிதனை "சமுதாய விலங்கு" என்கிறோம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத சிறப்பு - சிந்தனை; அதனால் தான், மனிதனுக்கு மட்டுமே பகுத்தறியும் திறம் இருக்கிறது. அதைச் சரியாய் புரிந்து கொள்ளாமல் - நம் வசதிக்கேற்ப நம் சிந்தனையை - திரித்து சொல்லுதல் வேதனைக்குரியது. இந்த அடிப்படையில் தான் மது அருந்துவதையும் அணுகவேண்டும் என்பது என் பார்வை. மேலும், சிந்தனை அழிவிற்கு காரணம் பல காரணிகள் இருக்கின்றன என்பதால் - மது அருந்துவோரை மட்டும் இழிவாய் பார்க்கும் தவறையும் நிறுத்தவேண்டும். மது அருந்திய போது; எனக்கு எந்த குற்ற-உணர்வும்...

            இருந்ததில்லை! அதுபோல், மது அருந்தியதை நிறுத்தியதில் எனக்கு பெருமிதமும் இல்லை! ஆனால், மது அருந்துவதால் என் சிந்தனை அழிகிறது என்ற உணர்வு வந்த போது - என்னுள் எழுந்த வேதனை இன்னமும் "பசுமரத்து ஆணி போல்" நினைவில் இருக்கிறது. அந்த சிந்தனை எழுந்த உடனேயே - மது அருந்துவதை நிறுத்தும் என் முனைப்பில் - உறுதியாய் இருந்து திட்டம் வகுத்தேன். சமீபத்தில் நான் புலால் அருந்துவதை நிறுத்துவதற்கு முன், நான் மேற்கொண்ட திட்டமிடல்களை ஒரு பதிவாய் எழுதி இருந்தேன். அதே அடிப்படையில் தான், ஓராண்டுக்கு முன் மது அருந்துவதை, நிறுத்துவதையும் அனுகினேன். அதுவே தான், புகைப்பிடிப்பதை நான் நிறுத்தியதன் அடிப்படையும்; அதை என்மகள் எனக்கு எப்படி புரியவைத்தாள் என்பதைக் கூட ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். எனவே, மனித சிந்தனையை அழிக்கும் - எந்த செயலையும் நாம் அறவே மறுக்கவேண்டும்! அதில், மது அருந்துதல் தாண்டி பற்பல காரணிகள் உள்ளன.

எந்த காரணி என்பது முக்கியமில்லை!
காரணியை எப்படி சரியாய்; வைராக்கியத்தோடு அணுகுகிறோம் எனபதே முக்கியம்!!                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக