வியாழன், மார்ச் 24, 2016

"கலாபவன்"மணியைப் பற்றிய தவறான விமர்சனம்...



      கலாபவன்-மணி இறந்தவுடன் பலரும் "திடீர்" மருத்துவர்கள் ஆகி, அவர் மதுவால் தான் இறந்தார்!" என்று அவரை இகழ்ந்து பேசி, "மது அருந்துவோர்க்கு" அறிவுரை என்ற பெயரில் - பதிவுகள் எழுதியதைக் காண நேர்ந்தது. இந்த நிகழ்வு மட்டுமல்ல, எந்த நிலையிலும், மது அருந்துவோரை "குடிகாரர்கள்" என்று இழிவாய் விமர்சித்து பேசுவதை நான் எதிர்த்திருக்கிறேன்; தொடர்ந்து எதிர்ப்பேன். இது ஏனோ "நானும் மது அருந்தியவன்!" என்ற "குற்ற உணர்வில் அல்ல!" திருமணத்திற்கு பெண் தேடும்போது, இணையத்தில் செய்த விளம்பரத்தில் என் சுய-விபரத்தின் கீழ், நான் மது அருந்துவேன் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். பலரும் அதை எதிர்த்தனர்; ஆனால், நான் என் செயலில் தீர்மானமாய் இருந்தேன்; அதை மாற்றவே இல்லை! மது அருந்துவதால் விளையும் "பலரும் அறியாத/உணராத" ஒரு தீமையை நானறிவேன். ஆனால், பலரும் விமர்சிப்பது போல் "உயிர் கொல்லும் பழக்கம் அது!" என்ற அர்த்தத்தில் இல்லை. அப்படி எனில்...

      மதுவைத் தவிர "உயிரைக்" கொல்லும் பழக்கம் வேறு இல்லையா?! நாம் சாப்பிடும் துரித உணவில் (Fast Food) துவங்கி, நாம் குடிக்கும் குளிர்பானங்கள் வரை - உயிரைக் கொல்லும் காரணிகள் பல உள்ளன. அவ்வளவு ஏன்?! "மதுவை விட, குளிர்பானங்கள் மிக ஆபாத்தானவை!" என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அப்படி இருக்க, ஏன் எதற்கெடுத்தாலும் "மது அருந்துவோர்" மேல் இத்தனை காழ்ப்புணர்ச்சி கலந்த விமர்சனங்கள்?! அவையும் கூட, ஏன் ஒரு அடிப்படை உண்மை கூட இல்லாமல் "உணர்ச்சி வெடிப்பாய் (Emotional Burst)" இருக்கிறது? ஏன், மதுப்பழக்கம் பற்றி விமர்சிப்போர்க்கு இப்படியோர் காழ்ப்புணர்ச்சி?! மேலும், இவர்களின் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் "வறுமைக் கோட்டிற்கு" கீழ் இருப்போர் குறித்தே இருக்கிறது. அதாவது "சமுதாயக் கேடு" என்பதாய் பார்க்கிறார்களாம். "அவர்களின் உடல்நிலை அழிகிறது! குடும்பம் வாழ்வின்றி சிதைகிறது!" என்பதே அடிப்படையாம். உண்மையை...

        "உங்களுக்குள் மட்டுமாவது" கூறிக் கொள்ளுங்கள். மதுப்பழக்கம் ஒன்றுதான், அவர்களின் வாழ்வியல் சீர்கேட்டிற்கு காரணமா? ஏன், மதுப்பழக்கம் சார்ந்து எழும் இந்த கோபம், அவர்களை வஞ்சிக்கும் "மற்ற பல" காரணிகள் குறித்து எழவில்லை? மற்ற எல்லா காரணிகளை விட - "காய்கறி முதல் உடை" வரையிலான அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வே முக்கிய காரணி. அதில் பெரும்பங்கு - மிக-அதிகமான சம்பளத்தால், விலைவாசியைப் பற்றிய கவலையே இல்லாத - நடுத்தர/மேல்தட்டு வர்க்கதத்திற்கு இருக்கிறது. ஏன், அதைப் பற்றி எவரும் விமர்சிப்பதே இல்லை?! நான் மிகவும் ஆதங்கப்படுவது - இவர்களுக்கு அனுபவம் இல்லாத ஒன்றைப் பற்றி, எவரோ சொன்னதன் அடிப்படையில், எந்தவொரு புரிதலும் இல்லாமல் - எப்படி, இவர்களால் விமர்சிக்க முடிகிறது?! என்பதே. மதுவால் விளையும் தீமை மீதான என் பார்வை - முற்றிலும் வேறு விதமானது! அந்த தீமை நிச்சயம் ஒரு சமுதாயத்தை சீர்குலைக்கும். 

     ஆயினும் "அம்மாதிரி தீமை இல்லாத மனிதன் மிக மிக மிக... அரிது!" என்று என்னால், உறுதியாய் கூற முடியும்!! அந்த தீமைக்கு, பல விசயங்களை/பழக்கங்களைப் போல் "மதுவும் ஒரு காரணி!". ஆனால், மதுவை விட "மிகப் பரவலான அளவில்" மற்ற காரணிகள், அந்த தீங்கை விளைவிக்கின்றன. "மது அருந்தாதோர்" மட்டுமல்ல; மது-அருந்தும் பலரும் கூட "அதை உணர்ந்திருக்க" மிகக்குறைவான வாய்ப்பே உள்ளது. அதற்கு "தன்னை அறிதலும்; தன்னை ஆய்தலும்" மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி ஒரு பதிவெழுத குறிப்புகள் எடுத்து சில ஆண்டுகள் ஆகின்றன! ஆனால், நான் மதுவை நிறுத்தி 9 மாதங்கள் தான் ஆகின்றன! குறைந்தது, 1 ஆண்டாவது நிறுத்தி இருக்கவேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறேன். அந்த ஒராண்டு காலம், அந்த விளைவை எழுத "நான் அருகதையானவன்" என்ற மனத்திருப்தியை எனக்களிக்கும். இந்த புரிதல், பலரையும் போல் "கற்பனையில்" விளைந்ததல்ல! இது, முழுவதும் என் அனுபவம்.

      மதுவருந்"திய" குற்றவுணர்வோ; நிறுத்தியிருப்பதில், "பெருமை"உணர்வோ எனக்கில்லை. அப்பழக்கம், அன்று இருந்தது! இன்று இல்லை!! நாளை? நாளை நான் இருப்பேன் என்பதற்கும் எதனால் இறப்பேன் என்பதற்கும் - எந்த உத்தரவாதமும் இல்லை! நாளை இ(ரு/ற)ப்பின் தெரியும். "மதுபழக்கம் நல்லது!" என்பதல்ல என் வாதம். ஆனால், மனதில் "மூட்டை மூட்டையாய்" அழுக்கை வைத்துக்கொண்டு "மது அருந்துவோரைப் பற்றிய விமர்சிப்பது, மிக ஆபத்தானது!!" என்பதே என் பார்வை. அதே போல் "மது அருந்துவதில்லை!" என்ற "பெருமை கூறல் (Style Statement)" மட்டும் ஒருவரின் ஒழுக்கத்திற்கு சான்றாகாது; அந்தவொரு பழக்கம் அவருக்கில்லை, அவ்வளவே. சரி, கலாபவன்-மணியின் இறப்பு, தற்போது மரணம் என்ற விதத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கு, அவரை விமர்சித்தவர்களின் பதில் எப்படி இருக்கும்? இதைக்கூட, மதுவால் விளைந்த "பின்/எதிர்"விளைவு என்று வாதிடலாம்! அப்படியெனில் "மது அருந்தாத, ஒரே காரணத்தால்" 

100 வயது வரை வாழ்ந்த, அவர்களுக்கு பரிச்சயமான "10 நபர்களை" 
ஒரு பட்டியலிடட்டும் - பார்ப்போம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக