புதன், டிசம்பர் 30, 2015

அதிகாரம் 015: பிறனில் விழையாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 015 - பிறனில் விழையாமை

0141.  பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
           அறம்பொருள் கண்டார்கண் இல்

           விழியப்பன் விளக்கம்: அறம் மற்றும் பொருள் சார்ந்த உலகப்-பொதுமறையை
           ஆராய்ந்தவரிடம்; வேறொருவருடன் உறவிலுள்ள பெண்ணைக் காதலிக்கும் அறியாமை
           இருப்பதில்லை.
(அது போல்...)
           பொறாமை மற்றும் பேராசை சார்ந்த பொது-நியதிகளை உணர்ந்தவர்களிடம்;
           மற்றவர்களிடம் இருக்கும் தனித்துவத்தைத் தூற்றும் எண்ணம் இருப்பதில்லை.

0142.  அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
           நின்றாரின் பேதையார் இல்

           விழியப்பன் விளக்கம்: எவ்விதமான அறநெறிகளை மறந்து பயணிப்பவர்களிலும்; பிறர் 
           மனைவியை விரும்புகிறவரை விட, அறிவிலார் எவருமில்லை.
(அது போல்...)
           எவ்விதமான தீய-எண்ணங்களை கொண்டு இருப்பவர்களிலும்; வேண்டாதவர் துன்பத்தை 
           விரும்புகிறவரை விட, தீயவர் எவருமில்லை.

0143.  விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
           தீமை புரிந்தொழுகு வார்

           விழியப்பன் விளக்கம்: சந்தேகமின்றி நம்பிய ஒருவரின் இல்லத்தவளிடம்; தவறான உறவில் 
           இணைந்திருப்பவர், இறந்தவரைக் காட்டிலும் வேறல்லர்.
(அது போல்...)
           குறையின்றி விருந்தோம்பிய அன்பரின் குடும்பத்திடம்; பகையான உணர்வோடு 
           பழகுவோர், விலங்கிலிருந்து மாறுபட்டவர் அல்லர்.

0144.  எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
           தேரான் பிறனில் புகல்

           விழியப்பன் விளக்கம்: தினையளவும் ஆராயாமல், பிறர் இல்லத்தாளிடம் விழைந்தால்; 
           மலையளவு புகழுக்குரியர் ஆயினும், என்ன சிறப்பு?
(அது போல்...)
           எள்ளளவும் மனிதமில்லாமல், பிறர் மனதைப் புன்படுத்தினால்; கடலளவு கல்விக்குரியவர்
           ஆயினும், என்ன பயன்?
          
0145.  எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
           விளியாது நிற்கும் பழி

           விழியப்பன் விளக்கம்: வருந்தாமல் கிடைப்பது என்றெண்ணி, பிறர் இல்லத்தாளிடம்
           நெறிதவறி நடப்பவன்; எக்காலத்திலும் அழியாத குலப்பழியை அடைவான்.
(அது போல்...)
           சிரமமின்றி சம்பாதிப்பது என்றெண்ணி, தொழில் பங்குதாரரிடம் தர்மமின்றி திருடுபவன்;
           எந்நேரத்திலும் மறையாத மனவுளைச்சலை அடைவான்.

0146.  பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
           இகவாவாம் இல்லிறப்பான் கண்

           விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளிடம், நெறிதவறி நடந்து கொள்பனிடம்; பகை/
           பாவம்/பயம்/பழி - எனும் நான்கும் நீங்காமல் இருக்கும்.
(அது போல்...)
           பிறர் உரிமைகளை, ஊழல் செய்து பறிப்பவர்களிடம்; பேராசை/பொறாமை/வன்மம்/சூழ்ச்சி
           - எனும் நான்கும் எப்போதும் இருக்கும்.

0147.  அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
           பெண்மை நயவா தவன்

           விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையுடன் இல்லற வாழ்க்கையை வாழ்பவன்; பிறர் 
           இல்லத்தவளின் பெண்-தன்மையை விரும்பமாட்டான்.
(அது போல்...)
           பொதுத்தன்மையுடன் ஜனநாயக ஆட்சியைப் புரிவோர், தம் குடிமக்களின் சுய-தன்மையை 
           அழிக்கமாட்டார்கள்.

0148.  பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
           அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

           விழியப்பன் விளக்கம்: பிறர் மனைவியை - தவறான எண்ணத்துடன், பார்க்காத 
           மதிப்பிற்குரிய ஆண்மை; சன்றோர்க்கு - அறம் மட்டுமல்ல, முழுமையான ஒழுக்கமும் 
           ஆகும்.
(அது போல்...)
           பிறர் உரிமையை - காழ்ப்பு உணர்வுடன், மறுக்காத சிறப்புக்குரிய மனிதம்; மனிதர்க்கு - 
           அடிப்படை மட்டுமல்ல, புனிதமான பிறவிப்பயனும் ஆகும்.

0149.  நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
           பிறர்க்குரியாள் தோள்தோயா தார்

           விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளின் தோளைத் தீண்டாதவரே; அச்சுறுத்தும் 
           கடலுக்கு நடுவே இருக்கும் இவ்வுலகில், நன்மைக்கு காரணமானர் ஆவர்.
(அது போல்...)
           பிறர் சொத்துகளை அபகரிக்க முயலாதவரே; பயமுறுத்தும் கொள்ளையர்களுக்கு  நடுவே  
           வாழ்வோர் மனதில், நம்பிக்கையை விதைப்பவர் ஆவர்.

0150.  அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
           பெண்மை நயவாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: அறத்தை மனம்-கொள்ளாமல், அறமற்ற செயல்களே செய்பவர் 
           ஆயினும்; பிறரை மணம்-கொண்டவளின், பெண்மையை விரும்பாத தன்மை நன்றாம்.
(அது போல்...)
           பொதுநலத்தை எண்ணாமல், சுயநலமான காரியங்களே செய்பவர் ஆயினும்; பிறரின் 
           சொத்துக்களை, அபகரிக்காத குணம் சிறப்பாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக