ஞாயிறு, அக்டோபர் 18, 2015

உணவு எப்போது அபத்தமாகிறது???



             1990-களின் மத்தியில் எழுத்துச் சித்தர். பாலகுமாரன் அவர்களின் ஒரு கட்டுரைத் தொகுப்பு என்னில் பல மாற்றங்களை உண்டாக்கியது. மிகக் குறிப்பாய் "உணவை"ப் பற்றிய கட்டுரை எனக்குள் பெருத்த அழுத்தத்தை உண்டாக்கியது. அதில் "காலை உணவருந்திக்கொண்டு இருக்கும்போதே; மதிய உணவு என்னவென்று விவாதிப்பது - அபத்தம்!" என்ற அர்த்தத்தில் ஓர் சொற்றொடர் இருக்கும். அந்த கட்டுரை மட்டுமல்ல; உணவைப் பற்றி, பல புரிதல்களை என் வீட்டிலேயே விதைத்தவர் உண்டு; "என் தமிழுக்கு(ம்) வித்திட்ட" என்னப்பனே அவர். இன்றுவரை - சாப்பாட்டில் எந்தக் குறை இருந்தாலும், வெளியே சொல்வதில்லை அவர்; அவருக்கும் சமைக்கத் தெரியும் என்பதால் கூட இருக்கலாம். அடுத்த வேளைக்கு என்ன உணவு வேண்டும்?! என்று கேட்டால் கூட "எதுவாயினும் பரவாயில்லை!" என்பார்; வெறும் சொல்லிலல்ல! உண்மையில், எந்த வகை உணவானாலும் ஏதும் சொல்லாது சாப்பிடுவார். அவரின் அந்த செயல்...

     என்னை ஆச்சர்யப்படுத்தும். இப்படி "என் தமிழுக்கும்; என் எழுத்திற்கும் வித்திட்ட" இவ்விருவரும் உணவு பற்றியும் என்னுள் பெருத்த புரிதலை உண்டாக்கினர். இன்றும் கூட என்னவளோ/என்-தமக்கையோ/என்-தாயோ/அல்லது வேறெவரோ" அடுத்த வேளைக்கு என்ன வேண்டும்? என்று கேட்டால் "எதுவாயினும்!" என்றே சொல்வேன்; தொடர்ந்து வற்புறுத்தினால் "இட்லி/தோசை" போன்று எளிதில் பலருக்கும் செய்யக்கூடிய உணவையே பரிந்துரைப்பேன். கடந்த 11 ஆண்டுகளாய் நானும் சமையல் செய்கிறேன்; நம் உணவு மட்டுமல்ல - வெளிநாட்டு உணவு வகைகள் கூட சமைப்பேன்; இதுபற்றி கூட முன்னரே பதிந்திருக்கிறேன். இப்படி, மேற்குறிப்பிட்ட இருவர் மட்டுமல்லாது; என் சமையல் கலையும் - உணவைப் பற்றி எனக்கு பல புரிதல்களைக் கொடுத்திருக்கிறது. உணவு பற்றி நான் பெரியதாய் அலட்டிக்கொள்வதில்லை! நாம் உயிர் வாழ்வதற்கு உணவும் ஓர் அத்தியாவசியம்; மறுக்கவில்லை! ஆனால், ஒருவேளை...

      சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அடுத்தவேளை சாப்பாடு பற்றி பேசுவதையே நான் "அபத்தமாய்" பார்க்கிறேன். என்னவள் என்னுடன் இருந்தபோது; ஒவ்வொரு வேளைக்கும், இன்ன உணவு என்று ஒருவாரத்திற்கு முன்பே கூட நாங்கள் பட்டியலிட்டதுண்டு. ஆனால், அது நாங்கள் இருவரும் பணியில் இருந்ததால்; முற்கூட்டியே திட்டமிடுவதற்காக செய்தது. மேலும், யார் என்ன சமைப்பது? என்பதையும் முன்பே வகுத்து விடுவோம். எனவே, ஒருவர் உணவு சமைக்கும்போது - மற்றவர் பிற வீட்டு-வேலை அல்லது எம்-மகளுக்கு தேவையானதை செய்வது என  திட்டமிடுவோம். மற்றபடி, இந்த உணவுதான் வேண்டும் என்ற ஆவலோ அல்லது சுவையின் மீதான ஆசையோ அல்ல! எனவே, தம்பதியர் இருவரில் ஒருவர் வீட்டில் இருக்கும் பட்சத்தில்; "இன்னொருவர் சமையலில் வேலையைப் பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில்" இப்படிப்பட்ட கேள்விகள் அபத்தம் என்பது என் பார்வை. இவை எல்லாவற்றையும் தாண்டி,  சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட...

          சிந்தனை ஒன்று; இந்த உலகத்தின் ஆகச்சிறந்த உணவேயாயினும் "உண்டது தொண்டை தாண்டிடின்" அது வெறும் சக்கை". ஒருவர் வாயில் நுழைந்தபின்; அவசரத்துக்கு அவர் கையாலே எடுத்தாலும்; அதைப் பின்னர் உண்ண தயங்குவர். அதுதான், உணவு; இதற்கேன் இத்தனை ஆர்ப்பாட்டம்? இது அபத்தம் அல்லவா? என்று என்னுள் அடிக்கடி தோன்றும். இதைக்கூட ஒரு கவிதையில் ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அடுத்த வேளை உணவைப் பற்றி; தேவையில்லாமல் பேசுவதையே அபத்தம் என்று நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு "தாம் சாப்பிடும் உணவைப் புகைப்படம் எடுத்து; பகிரும்" சமூக வலைதளங்களைப் பார்த்தால் எத்தனை ஆற்றாமை எழும்?  முகநூலைக் கூட என்னால், எளிதில் கடந்து வர முடிகிறது. என் வாட்ஸ் ஆப் குழுவில் அடிக்கடி இப்படிப் புகைப்படங்களை பகிரப்படும் போது; என்னுடைய ஆற்றாமை அளவுகடந்து செல்கிறது; இதைப் பலமுறை கடிந்திருக்கிறேன். இப்போது, பெருமளவில் குறைந்திருக்கிறது.

       ஒருவேளை, புரட்டாசி காரணமா?! என்று தெரியவில்லை. புரட்டாசி முடிந்ததும், புற்றீசல் போல் கிளம்புமோ? பார்ப்போம்... என்ன நடக்கிறதென்று! எப்போதேனும், விழாக்காலம் போன்ற தினங்களில் சமைத்த/உண்ட "சிறப்பு" உணவைப் பகிரலாம், தவறில்லை. அல்லது, சமையலில் நாம் செய்த மாற்றத்தை; புதுமையான உணவு-வகையைப் பகிரலாம்; நானும் அப்படி செய்திருக்கிறேன். அதுபோல், இப்படிப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் அபத்தத்தை விட - நண்பர்கள் ஏதோ பேசி இருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில் வாட்ஸ்-ஆப்பைத் திறந்து பார்த்து; உணவுப்-புகைப்படம் என்று தெரிந்ததும் ஒரு ஆற்றாமை வரும் பாருங்கள்! அதை சொல்லில் விவரிக்கவே முடியாது. எனக்கிருக்கும் ஒரேயொரு கேள்வி இதுதான்: இப்படி புகைப்படங்கள் அனுப்ப என்ன காரணம்? தொடர்ந்து யோசித்ததில், எனக்கு பின்வரும் காரணங்கள் இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது:
  • இது போன்ற சமையலை எவரும் சமைக்க முடியாது; அதனால் பகிர்கிறோம்
  • நிறைய பேர் சமைப்பதே இல்லை; அதனால் பகிர்கிறோம்
  • வகை/வகையாய் செய்து உண்கிறோம்; எவரும் இப்படி சமைப்பதில்லை
  • இதோ உணவு; வாருங்கள், உண்ணலாம்! என்ற அழைப்பு
        இப்படித்தான் என்னால் யூகிக்க முடிகிறது; ஆனால், இதில் எதுவும் உண்மையல்ல! இப்படி அனுப்புபவர்களில் ஒரு நண்பனின் அம்மாவின் சமையல் - எனக்கு(ம்) அமிர்தம் போன்றது. குறிப்பாய், ஞாயிறு மதியம் "அரிசி கலந்த களியும்; கறிக்குழம்பும்" செய்வார்; அப்படியொரு அருமை! அவனுக்கு(ம்), என் தமக்கை செய்யும் உணவு பிடிக்கும். இதுபோல், ஒவ்வொருவருக்கும் பல அபிமானங்கள் இருக்கும். எனவே, வேறெவரும் சமைக்க முடியாது! என்ற எண்ணத்தில் இவர்கள் பகிரவில்லை. "புகைப்படத்தில் இருக்கும் உணவை" உண்ணமுடியாது என்பதால், அழைப்பும் அல்ல! அக்டோபர் 3-ஆம் தேதி மதியம் நான் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தேன்; 4-ஆம் தேதி இரவு முதல் 18-ஆம் தேதி (இன்று) வரை என் தினசரி உணவு கீழ்வருவதே: வடிக்கும் சோற்றை மூன்றாகப் பிரித்து; 1. ஒரு பிரிவுக்கு என் தமக்கை அரைத்த பருப்புபொடி, 2. இன்னொன்றுக்கு என் தமக்கை செய்து கொடுத்த இஞ்சிக் குழம்பு,

       3. இறுதியாய், இங்கே வாங்கிய தயிர். இந்த நாட்களுக்கு இடையில் என் நண்பன் வீட்டு பிரியாணி இரண்டு வேளை; ஒருவேளை உணவகத்தில்; மற்ற வேலைகள் அனைத்தும் ஒமேற்குறிப்பிட்ட உணவே! கடந்த 5 வருடங்களாய் - பெரும்பான்மையில், காலையில் "பாலில் ஊற வைத்த, சோளத்தட்டைகள் (காரன்-ஃப்ளேக்ஸ்)" தான். 15/20 பேர்களுக்கு கூட வகை வகையாய் சமைத்திருக்கிறேன். இப்படி எளிமையாய் தான் உண்ணவேண்டும்; விதவிதமாய் உண்ணக்கூடாது என்பதல்ல! என் வாதம். காரணமின்றி, நீங்கள் சாப்பிடுவதை மற்றவர்களுக்கு புகைப்படமாய் அனுப்பவேண்டாம் என்பதே என் வேண்டுகோள். வேடிக்கை என்னவென்றால், பலரும் அதற்கு பதிலாய், வேறு புகைப்படங்களே அனுப்புவர்; நான் இதை தவறென்று சுருக்கமாய் சுட்டிக்காடுவேன். ஆனால், உணவைப் பற்றிய என் புரிதல்களை இங்கேயாவது பதியவேண்டும் என்று தோன்றியது. மீண்டும் சொல்கிறேன்; தொண்டையை தாண்டிவிட்டால்...

உயர்தர அமிர்தமே ஆயினும் - அது வெறும் சக்கை! 
எனவே, அதற்கு இப்படியோர் முக்கியத்துவம் கொடுப்பது அபத்தம்!!  

பின்குறிப்பு: இதுவரை செய்ததில்லை; இனியும், செயப்போவது இல்லை! ஆனால், கீழ்வருவது போல் அடிக்கடி தோன்றும்: இது, நான் நேற்று சாப்பிட்ட உணவு! என்று "ஒன்றை"ப் புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும் என்று தோன்றும். ஆனால், அவர்களைக் காயப்படுத்துவது என் நோக்கமல்ல! இப்படி உணவைப் பற்றி புகைப்படங்கள் எடுத்தனுப்பி - பேசுவதற்கு வேறொன்றும் இல்லை என்பதாய்; ஒரு குழுவில் பரிமாற்றங்கள் நடைபெறுவது, அபத்தத்தின் உச்சமாய் எனக்கு தோன்றும். அவரவர்களுக்கு எப்படி தோன்றுகிறதோ; அப்படியே தொடரட்டும்! இப்போதெல்லாம், அந்தப் புகைப்படங்களை நான் பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை! ஆனால், இப்படியோர் பதிவை; பதியவேண்டும் என்பதை என் கடமையாக உணர்கிறேன்.    

2 கருத்துகள்:

  1. ழாக்காலம் போன்ற தினங்களில் சமைத்த/உண்ட "சிறப்பு" உணவைப் பகிரலாம், தவறில்லை. அல்லது, சமையலில் நாம் செய்த மாற்றத்தை; புதுமையான உணவு-வகையைப் பகிரலாம்; நானும் அப்படி செய்திருக்கிறேன். அதுபோல், இப்படிப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் அபத்தத்தை விட - நண்பர்கள் ஏதோ பேசி இருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில் வாட்ஸ்-ஆப்பைத் திறந்து பார்த்து; உணவுப்-புகைப்படம் என்று தெரிந்ததும் ஒரு ஆற்றாமை வரும் பாருங்கள்! அதை சொல்லில் விவரிக்கவே முடியாது. எனக்கிரு

    பதிலளிநீக்கு