ஞாயிறு, ஜூலை 26, 2015

இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு...



           இறைவன் இருக்கிறாரா? இல்லையா?? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இரண்டு தலையங்கள் இறை-நம்பிக்கையூனூடே "ஒரு பகுத்தறிவு(வும்)" இருப்பதை வெளிப்படுத்தும். பாகம்-1 இல் "றைவழிபாட்டில் அபத்தங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை; எந்த ஓர் நம்பிக்கையும் வரைமுறை தாண்டி அதிகமாகும் போது "மூட நம்பிக்கை" உருவாவதை தடுக்க முடியாது; அது அளவு கடந்த நம்பிக்கையின் பால் விளையும் ஒரு விளைவு. அம்மாதிரியான மூட-நம்பிக்கைகளில் எனக்கும் உடன்பாடில்லை" என்ற பின்குறிப்பை இட்டிருப்பேன். ஆம்! இறைவழிபாட்டில் "மூட-நம்பிக்கை(யும்)" இருக்கிறது என்ற என்-ஒப்புதல் இன்றும் அப்படியேத்தான் இருக்கிறது. அதனால் தான் "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற தலைப்பில் ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறை பற்றி எழுதிய என்னால் "இறைவழிபாட்டில் நேர விரயம் தேவையா?..." என்றும் எழுத முடிந்தது. மற்ற விசயங்களைப்  போல் இறை-நம்பிக்கையையும் பகுத்தறிந்து பார்க்க விரும்பிகிறேன். 

      அதனால் இறைவன் (/இயற்கை/உயர்-சக்தி) மேல் இருக்கும் என் "அடிப்படை நம்பிக்கை" மாறவில்லை. பாகம்-2 இன் பின்குறிப்பில் சொல்லி இருந்த வண்ணம் "இந்த பிரபஞ்சத்திற்கு இணையான; இன்னுமோர் பிரபஞ்சத்தை - மனிதன் உருவாக்கும் வரை; நமக்கும் மேலான உயர்-சக்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது". அப்படி ஒரு பிரபஞ்சம் உருவானால், இறைநம்பிக்கையில் உள்ள என் மேற்கூறிய "அடிப்படை நம்பிக்கை" கூட மாறும். அப்படி மாற்றிக்கொள்ள எனக்கு எந்த தயக்கமும் இருக்காது. வாட்ஸ்-ஆப்பில்என்-நட்பு வட்டத்தில் திருக்குறள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, நட்பொன்று என்னை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லிற்று. நான் என்னப்பன் அடிக்கடி சொல்லும் "ஊழிற் பெருவலி யாவுள?..." என்ற குறளை சொன்னேன். விளக்கம் கேட்க, அதையும் சொன்னேன். உடனே, "அப்படியானால், எல்லாவற்றையும் விதி என்று ஏற்கவேண்டுமா?" என்றொரு விவாதம் துவங்கியது.

        "காரணம் ஏதுமின்றி, என்மீது எந்த குற்றமும் இல்லாமல் - நான் தண்டிக்கப்படும்போது" அதை விதி என்று நான் ஏற்றுக்கொள்வேன் என்றேன். வேறென்ன செய்வது? என் மனம் அமைதி கொள்ள எனக்கொரு காரணம் தேவைப்படுகிறது. அதற்காய் எல்லாவற்றிற்கும் "விதியே காரணம்" என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றேன். அப்போது ஒருவரின் விதி கடவுளால் அவர் பிறக்கும்போதே விதிக்கப்படுவது என்ற வாதம் வந்தது; எனக்கு அதில் உடன்பாடில்லை என்றேன். என் இறை-நம்பிக்கை என்பது வேறு! எல்லாவற்றையும் இறைவனோடு தொடர்புபடுத்துவது என்பது வேறு. எவரேனும் என்னிடம் "கடவுளை காட்டு!" என்றால் நான் உடனே சரணடைந்துவிடுவேன்; இல்லையப்பா! நான் கடவுளைப் பார்த்தது கிடையாது! எனவே என்னால் காட்டமுடியாது; ஆனால், அவர் இருக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பேன். "தூணிலும் இருக்கிறார்! துரும்பிலும் இருக்கிறார்!!" என்றால் "காற்றில் உமிழ்வது" கடவுளின் மேல் உமிழ்வதாய் ஆகிவிடும். 

     மற்றவரை திட்டினால் "அது கடவுளை திட்டுவதாய்" ஆகிவிடும். "அஹம் பிரம்மாஸ்மி (நான் கடவுள்)!" என்பது உண்மையாகிவிடும்; ஏனெனில் எனக்குள்ளும் தானே கடவுள் இருக்கிறார்? புலால் உண்ணுதலை "கொன்றால் பாவம்! தின்றால் தீரும்" என்று நியாயப்படுத்த முடியாது; ஏனினில், ஒவ்வொரு உயிரும் கடவுளே! கடவுளுக்கு "உயிர் பலி" கொடுத்தல் கூடாது. இப்படி பலவற்றை உதாரணம் காட்டி கேள்வி கேட்கமுடியும்.  அது போலவே "அவனின்றி ஓரணுவும் அசையாது!" என்பதும். அப்படியானால் பிறந்து ஒரு-மாதமே ஆன ஒரு குழந்தை "கடுமையான நோயால்" பாதிக்கப்படுவது; அப்படி பாதிக்கப்பட்டு இறக்காமலும் சித்திரவதை அனுபவிப்பதற்கும் கடவுள் பொறுப்பேற்கவேண்டும்! அல்லவா? அப்போது, கடவுள் ஏன் இப்படி செய்கிறார் என்ற கேள்வுக்கும் பதில் சொல்ல நாம் கடமைப்பட்டு இருக்கவேண்டும்! மாறாய்... அதெல்லாம் கடவுள் ஏற்கனவே எழுதிய விதி என்று சொல்லி தப்பித்தல் நல்லதன்று. 

      தொடர்ந்த விவாதத்தின் போது இன்னொரு நண்பர் "நம்பிக்கை+வினை+விதி+முற்பிறவி+கர்மா+மற்றும்பல = சக்தி/கடவுள்" என்றார். அந்த விளக்கத்தில் எனக்கு முழு உடன்பாடு இருக்கிறது; ஆம், பலதும் சேர்ந்ததன் கலவை தான் "கடவுள்". எனவே, கடவுளே எல்லாவற்றிற்கும் காரணம் என்பது சரியல்ல. இந்த கருத்தை படித்தவுடன் எனக்குள் கீழ்வரும் உவமானமும்/விளக்கமும் வந்தது. உலகம் என்பதை "ஒரு கார்ப்பரேட்" நிறுவனம் என்றும், கடவுள் என்பதை அந்த நிறுவனத்தின் "நிர்வாக இயக்குனர்" என்றும்  வைத்துக் கொள்வோம். பொதுவான பார்வையில் நிர்வாக இயக்குனர்(கடவுள்)-தான் எல்லாவற்றையும் செய்வதாய் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல... அவர் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்ப்பவர். அவரின் முக்கிய-வேலை கம்பெனி நடப்பதற்கு தேவையான பணம்/பொருள் போன்றவற்றை கொடுப்பது; அது கிடைக்க வழி வகுப்பது. அதாவது, கடவுள் - மனிதனையும்/மற்ற உயிரனம் போன்றவற்றை படைத்தது போல்!

       நிர்வாக இயக்குனர்(கடவுள்) என்பவர் தனக்கு கீழே "நம்பிக்கை+வினை+விதி+முற்பிறவி+கர்மா+மற்றும்பல" போன்று பல துறைகளை அமைக்கிறார்! அதன் பின்னர் அவருக்கு அங்கே பெரிய வேலையில்லை. ஏனெனில், அவற்றை கவனிக்க தகுதியான ஆட்கள் உள்ளனர். வேறொரு துறையில் உள்ள ஒருவர் செய்யும் தவறுக்கு நிர்வாக இயக்குனர்(கடவுள்) பொறுப்பாவாரா?! ஒரு உதாரணம்: கழிவறை சரியாக சுத்தம் செய்யப்படவில்லை என்றால், அதற்கு நிர்வாக இயக்குனர்(கடவுள்) பொறுப்பாவாரா?! இல்லையே! கழிவறையை சுத்தம் செய்யும் வேலையை கண்காணித்து, பராமரிக்கும் துறை தான் அதற்கு காரணம்; அத்துறை தலைவர் கூட நேரடியாய் பொறுப்பாக மாட்டார். ஏனெனில், ஒவ்வொரு துறையும் பல்வேறு ஊழியர்களை கொண்டிருக்கிறது; ஒவ்வொரு ஊழியரும், ஒவ்வொரு "தனி" செயல்/வினைக்கு காரணம். எனவே, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செயலுக்கும்/வினைக்கும் ஆன சாதக/பாதகங்கள் உள்ளன.

     அப்படிதான் கடவுள் என்பவரும்! எல்லாவற்றிற்கும் கடவுள் (நிர்வாக இயக்குனர்) என்ற ஒருவரையே காரணம் காட்டுதலோ/சாடுதலோ முறையன்று. இவை எல்லாம் தனித்தனி நிகழ்வுகள்(துறைகள்); இவற்றிற்குள் ஒரு தொடர்பு இருக்கலாம்! இவை எல்லாம் சேர்ந்த தொகுப்பாய் கடவுள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் கடவுள் மட்டுமே காரணம் அல்ல; அதை கடவுளே(கூட)ஏற்கமாட்டார். மேலும், உலகம் என்பது "இல்லம்" என்று கொண்டால்... அந்த இல்லத்தில் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமாகிறது; குடும்பத் தலைவர் தான் இல்லத்தின் எல்லா விசயங்களுக்கும் காரணம் என்றால் சரியாகுமா?! அங்கே மனைவி/கணவன்/மகன்/மகள்/பெற்றோர் என்ற பல உறவுகளின் பங்களிப்பு உள்ளது. இதில் எவரது பங்களிப்பு உயர்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாவற்றையும் சேர்த்த கலவை தான் அந்த இல்லம். கடவுளே என்றாலும்... ஒரு குடும்பத்தை அவரால் மட்டுமே நடத்துதல் சாத்தியம் இல்லை. ஒருவேளை...

  ஆண்தான் ஒரு குடும்பத்தின் எல்லாவற்றிற்கும் ஆதாரம்!
    என்ற தவறான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் மனோநிலை தான்... 
            உலகின் எல்லாவற்றிற்கும் கடவுள்தான் ஆதாரம் என்று சொல்ல வைத்ததோ???!!!                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக