ஞாயிறு, ஜூன் 01, 2014

மாதுளம்-பழ "ஜூஸ்"...



          என்மகளுக்கு மாதுளம்-பழம் மிகவும் பிடிக்கும் என்பதை சமீபத்தில் ஒரு மனதங்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன். என்மகள் போல் எனக்கு பழங்கள் மேல் அவ்வளவு பிரியம் இல்லை எனினும், ஏனோ மாதுளம்-பழம் மீது மட்டும் தனி அதிருப்தி உண்டு! அதில் இருக்கும் கொட்டையை சாப்பிட்டே ஆகவேண்டும்; அந்த கொட்டை கசப்பாய் இருக்கும் என்பதால் கூட இருக்கலாம். ஆனால், மாதுளம்-பிஞ்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்; அது மிகுந்த துவர்ப்பாய்/கசப்பாய் இருக்கும் எனினும், எனக்கு பிஞ்சு மிகவும் பிடிக்கும். ஆனால், என்மகளுக்கோ எல்லாப்பழமும் பிடிக்கும் எனினும்; மாதுளம்-பழம் மீது மட்டும் தனி பிரியம். இங்கே அபுதாபி உட்பட்ட பல அரபு-நாடுகளில் கிடைக்கும் பழ-ஜூஸ் (பழ-ரசம்) மிகவும் அருமையாய்; முழுக்க, முழுக்க பழத்தில் செய்தது போன்று அடர்த்தியாய் இருக்கும் என்பது அதை பார்த்தோருக்கு தெரியும். நானும், பலவிதமான் ஜூஸ்கள் வாங்குவேன்; எல்லாப்பழமும் கலந்த கலவை-ஜூஸ் கூட வாங்குவேன். 

     ஆனால், மாதுளம்-பழம் ஜூஸ் மட்டும் வாங்கியதில்லை. ஏனோ, ஒரு வாரத்திற்கு முன் அதை வாங்கவேண்டும் என்று தோன்றியது; என்மகளுக்கு பிடித்தது எனக்கு எப்படி பிடிக்காமல் இருக்கலாம்?! சரி, பரிசோதிப்போம் என்று வாங்கினேன். முதலில், பிடிக்கவில்லை எனினும்; பிறகு அதன் சுவை எனக்கு(ம்) பழக ஆரம்பித்தது. விளைவு?! 4 நாட்களில் அதை தீர்த்துவிட்டு இன்னுமொன்று வாங்கினேன்; அவை இரண்டையும் தான் ஒரு-சேர புகைப்படம் எடுத்து மேலே பதிந்துள்ளேன். நான் ஏன் இப்படி செய்கிறேன்?! என்ற கேள்வி எழுந்தது. இது என்மகள் மேலிருக்கும் "பாசமா (அ) பைத்தியக்காரத் தனமா?" என்ற கேள்வியும் வந்தது. இதிலென்ன இருக்கிறது? என்ற பதிலும்; கேள்வியாய் வந்தது. என்மகளுக்கு பிடிக்கும் என்பதால், அதை முயன்று எனக்கும் இப்போது பிடித்தாய் ஆகி இருக்கிறது. அடுத்த முறை என்மகள் வரும்போது இருவரும் சேர்ந்தே பருகுவோம், அவ்வளவு தான்; இதில் பெரிதாய் தவறேதும் இல்லை என்ற உண்மையும் விளங்கியது.

என்மகளுக்காய் இதை கூட நான் செய்யக்கூடாதா என்ன???    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக