ஞாயிறு, மார்ச் 02, 2014

"டூ-வீலர்" கனவு...


     90-களின் இறுதியில், டூ-வீலர் வாங்க வேண்டுமென்பது என் வாழ்நாள் இலட்சியம்! அதுவும், "ஹோண்டா-ஸ்பிளென்டர்" என்னுடைய முதல்-விருப்பமாய் இருந்தது; அதிலும், இடது-புகைப்படத்தில் உள்ள அதே "மாடல்" மற்றும் நிறத்தில் வேண்டுமென்ற ஆசை. அந்த வயதும் (26/27) அதற்கு பெரிதும்-பொருத்தமாய் இருந்த காலம்!! எப்படியோ என்னப்பனை நச்சரித்ததன் விளைவாய், மிகுந்த பிரச்சனைக்கு இடையிலும், அவர் 20,000 உரூபாய் கொடுத்தார். அதை வைத்துக்கொண்டு திருச்சியில் ஒவ்வொரு "டீலராய்" சென்று விசாரிக்க; விலை பகீரென்றது! என்னதான், என்னப்பன் "லோனில்"ஆவது வாங்கிக்கொள்ளப்பா! என்று சொன்னாலும்; என்மனது அதற்கு சம்மதிக்கவில்லை! சரியென்று என் அடுத்த விருப்பமான "யமஹா RX100" ஒன்றை இரண்டாவது-கையாய் (Second-Hand) வாங்க - விலை எல்லாம் பேசி "ட்ரையல்" பார்க்கும்போது - வண்டியில் ஏதோ குறையிருப்பதாய் பட்டதால், வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

      பின்னர், நண்பனொருவன் "புல்லெட்"வண்டி (வலது புகைப்படம்) வாங்கலாம் என்று சொல்ல - யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கு அந்த வண்டியும் மிகவும்-பிடிக்கும் எனினும், விலை காரணமாய் தான் அதை தவிர்த்து வந்தேன். சரியென்று, திருச்சி-ஐயப்பன் கோவில் பின்புறம் இருந்த(இருக்கும்?!) "டீலரிடம்" சென்று விசாரிக்க "மயக்கமே" வந்துவிட்டது! பின், நண்பன் "இரண்டாவது-கையாய்" வாங்கலாம் என்று  "ஐடியா" கொடுத்தான்; சரியென்று, அதற்கான முயற்சியில் இறங்கியபோது - நண்பனுக்கு அவசரமென்று ஒருபகுதி பணத்தை கொடுக்கவேண்டியதாயிற்று! அப்படியே, இருந்த பணம் முழுதும் கொடுத்துவிட்டேன். ஒருவாறாய், அவன் ஒருவர் மூலம் பணத்தை திருப்பி கொடுத்தனுப்பிய போது, அதை வாங்க உடன் வந்த நண்பருக்காய் - அந்த பணத்தை மீண்டும் கொடுக்கவேண்டியதாயிற்று! இப்படியாய், இன்றுவரை எனக்கென்று ஒரு "டூ-வீலர்" கூட வாங்கமுடியாது போயிற்று! அப்படி என்னதான்...

"எனக்கும் டூ-வீலருக்கும்" இருக்கும் இராசியோ? தெரியவில்லை!!! 

பின்குறிப்பு: 2012-ல் என்னவள் "டூ-வீலர்" வேண்டுமென்றபோது உடனே "முழுப்பனததையும்" செலுத்தி வாங்கிக் கொடுத்தேன். என்னதான், போர்ச்சுக்கல் நாட்டில் இருந்தபோதும்; இங்கே அபு-தாபியிலும் "Honda Accord" மகிழ்வுந்து வாங்கி இருப்பினும் - இன்னமும் கூட என் "டூ-வீலர்" கனவு நிறைவேறவே இல்லை! இன்று நினைத்தால் கூட என்னால் - இப்போதைய என் விருப்பமான "Royal Enfield" வாங்கமுடியும்; ஆனால், வாங்கி எங்கே நிறுத்திவிட்டு/எவரிடம் பொறுப்பு கொடுத்து வருவது என்ற குழப்பத்தில் - எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக