ஞாயிறு, ஜனவரி 19, 2014

என்மகளும்; "பாவேந்தர்"மகளும்...




         மேலுள்ள படத்தில் என்மகளுடன் இருப்பது "பாவேந்தர்" அவர்களின் மகள். ஆம்! அவர் பெயர் திருமதி. வசந்தா; அவர் என்னவளின் - அப்பத்தா!! ஒவ்வொரு விடுமுறைக்கு இந்தியா செல்லும்போது எப்படியாவது அவரையும், என்மகளையும் இணைத்து ஒரு-புகைப்படமாவது எடுத்துவிடுவேன். அப்படி இரண்டு வாரங்களுக்கு முன் விடுப்பில் சென்றபோது எடுத்த புகைப்படம் தான் இடது-மேற்புறம் உள்ளது. என்ன காரணமோ?! அவரிடம் என்மகளுக்கு பெரிய-அளவில் பிணைப்பு இல்லை; ஒருவேளை, அவர் என்மகளுடனே இல்லாதது காரணமாய் இருக்கலாம். ஆனால், என்மகள் அப்படி இருப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவளை நான் கண்டிக்கும் மிகச்சில விசயங்களில் - இப்படி அப்பெருமகளின் பக்கத்தில் அமரச்செய்வதும் ஒன்று! 4-வயதே ஆன என்மகளுக்கு 80-களில் இருக்கும் அப்பெருமகளின் "உயர்வும்; பெருமையும்" தெரியாது இருக்கலாம். ஆனால், 40-ஐ கடந்த நான் அங்ஙனம் இருத்தல் தகுமோ??!!

          என்னால் இயன்ற அளவிற்கு என்மகளிடம் அவ்வப்போது (வெளிநாட்டில் இருந்து அலைபேசியில் பேசும்போது கூட) - "பெரிய பெரிய-ஆயா" வந்தால் (ஏனெனில், என்னம்மாவை என்மகள் பெரிய-ஆயா என்று அழைப்பது வழக்கம்!) அவர்களிடம் ஒழுங்காய் பேசவேண்டும்; மரியாதையாய் நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்வேன். அவர்களுக்கு உறவாய் பிறப்பதற்கு நீ கொடுத்து வைத்திருக்கவேண்டும் (மகளே)என்று சொல்வேன்; அவளுக்கு எந்த அளவிற்கு  புரியும்/புரிந்தது பற்றி எனக்கு கவலை இல்லை.  ஆனால், அப்படி சொல்லவேண்டியது என் கடமை! என்னவளுக்கு(மற்றும் அவள் குடும்பத்தார்க்கு) வேண்டுமானால் எம்மகள் அவர்களின் "எல்லுப்பெயர்த்தி" என்பதில் பெரிய-ஆச்சர்யம் (அல்லது பெருமை) இல்லாதிருக்கலாம்; ஏனெனில், அவர்கள் குடும்பத்தில் அதுபோல் பல பெயர்த்திகள்/பெயரன்கள் இருக்கிறார்கள். ஆனால், என்குடும்பத்தில் என்-தமையன் மற்றும் தமக்கை மக்களுக்கு கிடைக்காத பெருமை என்மகளுக்கு கிடைத்திருக்கிறது என்பது பெரிய-விசயம் தானே??

         என்மகள் வளர்ந்தவுடன் கண்டிப்பாய் அப்பெருமகளின் அருமையும்/பெருமையும் புரியும்; அப்போது அந்த பெருமகள் இருப்பாரா?! என்பது எனக்கு தெரியவில்லை; கடந்த 2 பயனங்களின் போது அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதை என்னால் உணர முடிகிறது! நீங்களே மேலுள்ள புகைப்படங்களை பார்க்கும்போது அதை உணரலாம். அந்த 4 புகைப்படங்களும் 3 வெவ்வேறு காலத்தில் எடுக்கப்பட்டவை. கடந்த இருமுறையும் அப்பெருமகளின் மூத்தமகனிடம் (என் மருதந்தை) இதுபற்றி விவாதித்துள்ளேன். அப்பெருமகள் நீண்ட-காலம் வாழவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும்; அனால், உண்மை நிலை அவ்வாறு இல்லை! எது-எப்படியோ அப்பெருமகள் இருக்கும் வரையும்; என்மகள் இவைகளை உணரும் வரையும், இது போல் புகைப்படங்களாவது எடுத்து பாதுகாப்பது என் தலையாய கடமை! அதற்காய், என்மகளை எந்த விதத்தில் நிர்ப்பந்திக்கவும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை!! அதன் முழுப்பொருளை என்மகள் வளர்ந்தவுடன் உணர்வாள்!!!

            இளையமகனுடன் வசித்து வருவதால் அப்பெருமகளும் சில-ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல் என்மகளுடன் தொடர்ந்து இருக்கமுடியவில்லை (அப்போது என்மகள் சிறு-மழலை)! அப்படி இருந்திருப்பின் என்மகள் அவருடன் மிக-நெருக்கமாய் இருந்திருக்கக்கூடும். அப்பெருமகளின் தமிழுணர்வும்/ தமிழ்த்திறனும் என்மகளுக்கு பரிமாறப்பட்டு இருக்கும்; என்மகளுக்கு அது பேரிழப்பு தான்! குறைந்தது, என்-தமையன் மற்றும் தமக்கை மக்களைப்போல் என்னப்பனிடம் கூட நெருக்கமாய் இல்லாததும் ஒரு-குறையே! அம்மக்களைப்போல் என்னப்பனின் தமிழறிவும் என்மகளுக்கு பரிமாரப்படாதது இன்னுமொரு வருத்தம். அந்த விதத்தில் என்-தமையன் மற்றும் தமக்கை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்! என்னப்பனிடம் இளைய-வயது முதல் தமிழ் கற்ற அவர்கள் பள்ளி-பொதுத்தேர்வின் போது என்னப்பனை உடன்வைத்திருக்க தவறியதே இல்லை; குறிப்பாய் என் தமக்கையின் மகள்!! என்ன செய்வது? எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதில்லை!!!

        என்னவோ தெரியவில்லை?! அப்பெருமகளுக்கு என்மேல் அளவுகடந்த அன்பு! "ஏதோ தமிழில் கிறுக்குகிறேன்" என்பதால் கூட இருக்கலாம். "இளங்கோவன்" என்று என் முழுப்பெயரை சொல்லி-அழைக்கும் மிகச்சிலரில் ஒருவர் அவர். அந்த உச்சரிப்பு மட்டும் போதும்; அவரின் ஆசி எனக்கு எப்போதும் கிட்டும்! ஆனால், இந்த முறை அவர் அப்படி அழைக்கவில்லை; முதுமை அவரை அப்படி மாற்றி இருந்தது! ஆனால், என்னைப்பார்த்ததும் மலரும் அந்த சிரிப்பு தவறவில்லை; அதே சிரிப்பு. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேரு, அப்பெருமகள் பாவேந்தரின் "தமிழச்சியின் கத்தி" என்ற படைப்பை "உரைநடையாய்" எழுதி என்னிடம் கொடுத்து அச்சடிக்க சொன்னது; என்ன காரணமோ?! அவரால் அதை முடிக்கமுடியவில்லை; ஆனால், அவர் கையால் எழுதிக்கொடுத்த கொடுத்த அந்த தாள்களை பத்திரமாய் வைத்துள்ளேன். இப்போது அவரிருக்கும் நிலையில் அதை அவரால் தொடர்வது சாத்தியமில்லை; எனவே, அவரின் காலத்திற்கு பின் அதை முடித்து வெளியிடுவதே என் நோக்கம்!...

அப்பெருமகளுக்கு, பேர்-நன்றியாய் என்னுடைய அந்த செயல் இருக்கும்!!!

பின்குறிப்பு: "நான் ஏன் எழுதுகிறேன்???" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் - இந்த படைப்பும் என்மகள் வளர்ந்தவுடன் (நான் இல்லாதிருப்பினும்) அவளப்பனை முழுதுமாய் புரிந்து கொள்ள உதவும் என்ற ஓர் சிறிய "சுயநலம்" கலந்தே இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக