ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

முன்னுரை - என் "விருத்தப்பா" விருட்சமான விவரம்...



        பலமாதங்களாய் முயன்று - இப்போது தான் பாவேந்தரின் "குடும்ப விளக்கு" முழுவதையும் படிக்க முடிந்தது. பாவலை-ஆண்ட அவரின் "விருத்தப்பா"க்களை கண்டு என்னுள் எழுந்தது ஓர் தீப்பொறி; அப்பொறி என்னுள் ஏற்றியது ஓர் சுடர்விளக்கு. உடனே, குடும்ப விளக்கை பற்றிய என்னுடைய பார்வையையே; என் "கன்னி - விருத்தப்பா"வாய் எழுதினேன். நான் முதலில் எழுதியது - என்னறிவுக்கு இப்படித்தான் என்று தோன்றிய - "அறுசீர் விருத்தம்". இலக்கணம் ஏதும் என் நினைவில் இப்போது இல்லை என்பது தெளிவாய் தெரிந்ததால் - என்னப்பனுக்கு என்னுடைய விருத்தப்பாவை சொல்லி அவர் கருத்து வேண்டிட்டேன். அவர் என்னப்பனாய் இராது - எனக்கு பாடம் நடத்திய அதே தமிழாசிரியராய் இருந்திருந்தால் என்றோ நிறுத்திவிட்ட "கும்பிடறேன்பா" என்ற என் கண்டுபிடிப்பை மீண்டும் ஓர்முறை சொல்லவைத்திருப்பார் என்பது பின்னால் தெளிவாய் புரிந்தது. ஆனால், அவர் மிக எளிதாய் ஆரம்பித்தார்; முதலில் நீ கூற வருவதை "அறுசீர் விருத்தமாய்" கூறிடல் ஆகாது என்றார்! இதை "எண்சீர் விருத்தமாய்" எழுதினால் தான் சரியாய் வரும் என்றார். என்னுடைய விருத்தப்பாவின் "கரு" இதுதான்: "பாவேந்தரின் குடும்ப-விளக்கு உணர்த்திட்ட அனைத்தும் உணர்ந்து வாழ்வோரே - சான்றோர்! அதை விடுத்து - இன்றைய பெண்கள் அந்த குடும்ப-விளக்கையே அணைத்துவிட்டார்கள்; மேலும், பாவல்-அரசரின் விளக்கு, "அவர்"குடும்பத்துக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொதுவானது!!" இதுதான் என்னுடைய பாடலின் பொருள்(இன்றைக்கு என் முதல்-விருத்தப்பா வெளியாகிறது)!!! 

         அறுசீர் விருத்தத்தில் சொல்லமுடியாது என்பதை முதலில் கூறியாவர், பின்பு - மெதுவாய் அறுசீரில் "ஓர் சீரில் - இரண்டு அசை-மட்டும் தான் வரவேண்டும்"; எப்போதேனும் 3 வரலாம்; ஆனால், உன் பாடலில் 3 அசைகள் அதிகம் உள்ளன! 4 அசைகள் வரவே கூடாது; அதுவும் இருக்கிறது" என்றார்!! நான், "சீரா? அசையா??" என்று மயங்கினேன்; இந்த "மடையனுக்கு" எட்டிய அறிவு "சீர்" என்பது ஓர் வார்த்தை அல்லது பல-வார்த்தைகள் ஒன்றுசேர்ந்தது என்பதுதான். சரி, அசை பற்றி கொஞ்சம் சொல்லிடுங்கள் என்றேன்! "நேரசை, நிரையசை" என்ற 2 உண்டென்றார்; "குறில்(அ) தனித்தும், குறில் ஒற்றடுத்தும் (அம்); நெடில் தனித்தும் (ஆ), நெடில் ஒற்றெடுத்தும் (ஆம்) - வருவது "நேரசை"; குறில் இணைந்தும், குறில் இணைந்து ஒற்றடுத்தும்; குறில்-நெடில் இணைந்தும், குறில்-நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது "நிரையசை"! என்றார். அடடா, எங்கேயோ; எப்போதோ படித்திருக்கிறோமே என்றுணர்ந்தேன். பல தமிழ் மன்ற தேர்வுகளில் கலந்துகொண்டு "முதல் பரிசு" பெற்று என்னப்பனுக்கு புகழ்-தேடி தந்திருக்கிறேன். என்ன பயன்? தெளிவில்லாத "மனனம்" மூலம் படித்து முதல்-மதிப்பெண் எடுப்பதில் எந்த பயனும் இல்லை என்று பலமுறை கூறி இருக்கிறேன்; நான் படித்த அசைகளை உணர்ந்து ஓர் "விருத்தப்பா"-ஆவது எழுதி இருந்தால் நான் அதை மறந்திருக்க சாத்தியமே இல்லை. இதே போல் தான், அத்தனை படைப்பும்! செயல்முறை அனுபவம் இல்லாத "வெறும்-படிப்பு" மட்டும் நிலைப்பதற்கு சாத்தியமே இல்லை!!

       பிறகு, சீர்-இலக்கணம் இவ்வாறென்று நினைவூட்டினார்:  "நேர்/நேர் - தே/மா; நிரை/நேர் - புளி/மா; நிரை/நிரை - கரு/விளம்; நேர்/நிரை - கூ/விளம்". அட, இதையும் படித்திருக்கிறோமே என்று நினைவு கொண்டேன். சரி என்று, என்னுடைய பாடலை - "எண்சீர் விருத்தமாய்" மாற்றி அவரிடம் படித்து காட்டினேன்; அவர், இப்போது பரவாய் இல்லை; ஆயினும், பொருள் தெளிவில்லை என்றார்! என்னுள் "சொல்லில் குற்றமில்லை; இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்! ஆனால், பொருளில் தான் குற்றம் இருக்கிறது" என்று நக்கீரன் பேசினார்! என்னப்பன் பின்-தொடர்ந்தார்: எண்சீர்-இலக்கணத்தின் மரபு வேறு என்று விவரித்தார்: "எண்சீர்-விருத்தத்தில், 8 சீர்களில் - முதலிரண்டு சீர்கள், 3 அசைகள் கொண்டிடவேண்டும்; 3, 4 வது சீர்கள் - 2 அசைகள் கொண்டிடவேண்டும் - அதிலும் 3-வது சீர் "புளிமா"வாய் இருத்தல் நலம்; 4 ஆவது சீர் "தேமா"வாய் இருத்தல் வேண்டும்; இதே விதி 5 முதல் 8 வரியிலான அடுத்த 4 சீர்களுக்கும் பொருந்தும் (7 ஆவது சீர் "புளிமா"வாய் இருக்கலாம்) என்றார்!! என் மயக்கம் அதிகமானது;  ஆனால், ஓர் காரியத்தை செய்ய துணிந்துவிட்டால் - அதை செய்து முடிக்காமல் நான் ஓய்வதில்லை!! முயன்றேன், பலமுறை! எழுதினேன் மாற்றி, மாற்றி!! ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஓர் இலக்கணத் தவறு! பொருள் குற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது!! என்னப்பன், நான் தளர்வுருவது கண்டு "இது ஆரம்பம்-பா; அப்படித்தான் இருக்கும்! குழந்தை உடனேவா நடந்து விடுகிறது? என்றார்". அவருக்கு, என்மேல் நம்பிக்கை இருந்தது!!

    அவர் நம்பிக்கை(யை), வீணா(க்)கவில்லை! ஓர்நாள் - நான் மாற்றியெழுதி படித்திட்ட ஒன்றை; பொருள் மிகச்சரியாய் இருக்கிறது; இலக்கணம் நன்றாக இருக்கிறது; சிறு-மாற்றம் தான் வேண்டும் என்றார்! அவரே, இது சிறப்பாய் வந்திருக்கிறது என்றார்!! அந்த கணம் -  முதன்-முதலில்; என்மகளை அவள்-பிறந்து 10ஆவது நிமிடத்தில் என்கரங்களில் சுமந்த - பரவசம் போல் உணர்ந்தேன்!!! இதற்கிடையில், அவர் என்னுடைய பாடலை (பொருள் மாறாது)வேறொரு வடிவில் கொடுத்தார்; என்ன ஓர் புலமை அது! என்ன ஓர் பொருட்செறிவு அது!! என்னுடைய பொருளின்-கணம் கூடியதை உணர்தேன்; அந்த மாற்றத்தை என் பொருளில் கொண்டுவந்தேன். பின், அந்த பொருளை உள்வாங்கி என்னுடைய பாடலை முழுதுமாய் மாற்றி எழுதினேன். அதில், அவர் செய்திட்ட சில-மாற்றம் கொண்டு வந்திட்ட பாடலைத்தான் இன்னும் சில மணிநேரங்களில் பதியவிருக்கிறேன். முதலில், அவர் கொடுத்த பாடலைத்தான் பதியலாம் என்றிருந்தேன்! ஆனால், (என்னப்பனே, எனினும்!!) என்-சுயம் அதற்கு இடமளிக்கவில்லை. அதனால், என்னுடைய பாடலையே பதிவு செய்யப்போகிறேன்; ஆயினும், அவரின் பாடலை நிராகரிக்க விரும்பவில்லை; அதனால், என்னுடைய பாடலின் கீழே என்னப்பன் எழுதிய அந்த பாடலையும் வெளியிடுகிறேன்! என்னப்பனின், பாடலில் இருந்து ஓரிரு சொற்களை பயன்படுத்தி இருக்கிறேன்; அதில், எந்த தவறும் இல்லை; அவரின் வித்து தானே, நான்?! ஆனால், பாடல் நன்றாக வந்திருப்பதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

          இறுதியான - பாடல் வெளிவரும் முன்; நான் எழுதிட்ட முதல் வடிவத்தை இங்கே கொடுக்கிறேன்:

                             பாவேந்தரின் "குடும்ப விளக்கு",
                                      "பா"க்களை புரிந்த "பார்போற்றும்;
                             பாவலர்க்கு "பொது விளக்கு!
                                      "பா"க்களை உணரா "பார்வை"யிலர்க்கு,
                             பாவைவளர்க்கும் "பந்த பாசத்தின்"
                                       பாங்குகள் புரிவது, "விதி-விலக்கு"!!
                             பாவமே செய்யவில்லை யெனினும்;
                                       பாமரரவர்கள், பலியாவரே "இன்னலுக்கு"!!!

தமிழ்-இலக்கணம் தெரிந்தோருக்கு இதில் எத்தனை பிழைகள் உள்ளன என்பது தெளிவாய் தெரியும்; எனக்கே(??!!) இப்போது தெளிவாய் தெரிகிறது!! என்னப்பன் கூறிய பின்தான் - நான் சொல்லவந்ததை தெளிவாய் சொல்லவில்லை என்று உணர்ந்தேன். இதை உணர்ந்த பின், என் பாடல்-திறன் தானே செம்மையானது. இங்கே, ஒன்றை கூறிட விரும்புகிறேன்! என்னப்பன், எழுதிய வடிவத்தில் - நான் எண்ணிட்ட பொருள் வரவில்லை என்று ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்தேன்; அதை, என்னப்பன் வடிவாய் பாராட்டி - அந்த சொற்கள் வலிமையாயும் இருக்கின்றன! என்றார்; நான் அகமகிழ்தேன்.

என்னுடைய கன்னி-விருத்தப்பா; உங்களை கவரும் என்று நம்புகிறேன்!!!

பின்குறிப்பு: என்னப்பன் கூறியதாய் நான் எழுதி இருக்கும் இலக்கணத்தில் தவறு எதுவும் இருப்பின் - அருள்கூர்ந்து அதை என் பிழை என்பதை உணருங்கள்! அப்படி ஏதும் இருப்பின் எனக்கு தெரிவியுங்கள்; என்னப்பனிடம் தெளிவு-படுத்திக்கொண்டு பிழையை சரிசெய்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக