ஞாயிறு, ஜூன் 02, 2013

இவர்களுக்கு(மட்டும்) உருவிலா வழிபாடு எப்படி சாத்தியமாயிற்று???



      மேலிருக்கும் புகைப்படமும்; தலைப்பும், யாரை பற்றி எழுதப்போகிறேன் என்பதை விளக்கியிருக்கும் என்று நம்புகிறேன். ஆம்! கடவுளுக்கு "உருவே" (இன்றுவரை)கொடுக்காது எப்படி நம் "முகம்மதிய சகோதர/ சகோதரிகளால்" ஒருங்கிணைந்து வழிபட முடிகிறது?! உலகில், பெருவாரியான மக்கள் கொண்ட வேறு எந்த மதமும் இவ்வாறு வழிபாடு செய்கின்றனரா என்பது எனக்கு தெரியவில்லை! இவர்களால் மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று என்று நான் வியக்க துவங்கி பல ஆண்டுகள் ஆயிற்று!! இதுபற்றி ஓர் தலையங்கம் எழுதவேண்டும் என்று எண்ணி அது தள்ளிக்கொண்டே சென்றது; கடந்த தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல், நான் இப்போது அபு-தாபியில் பனி செய்வதால் அவர்களை மிக அருகில் இருந்து "பெரும்பான்மையினராய்" பார்க்க கிடைத்த வாய்ப்பு - வியப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த சூழல் தான், இத்தலையங்கத்தை இப்போதாவது எழுத என்னை உந்திச்சென்றது; உடனே சாத்தியமும் ஆயிற்று. இங்கு "மாமசூதி (Grand Mosque)" என்றொன்று உள்ளது; இங்கு மட்டுமல்ல - எல்லா அரபு நாடுகளிலும் இதுபோன்று உண்டென அறிந்தேன்! இதை அந்தந்த அரபுநாட்டை சேர்ந்த அரசர்கள் கட்டியிருப்பதாய் அறிந்தேன்; அங்கே என்னவளையும், என்-மகளையும் கூட அழைத்து சென்றிருந்தேன். அதைப் பார்த்த பின் என்னுடைய மேற்கூறிய வியப்பு பன்மடங்கு பெருகியது! என் வியப்பு விரிவடைந்ததற்கு காரணம், அதன் பிரம்மாண்டமான அளவு(மட்டும்) அல்ல!! மாறாய், கீழ்வரும் உவமையும்; அதிலிருக்கும் உண்மையும்!!!

   ஒரு சிறிய "Tube-light"-ஐ பரிசளித்துவிட்டு, நம் கோவில்களில் உபயம் என்று பெயர் (சிலர் புகைப்படங்கள் கூட) பதித்து  தம்பட்டம் அடிப்பவர்கள் மத்தியில் - நாட்டில் எல்லா இடங்களிலும் இந்த நாடுகளை உருவாக்கிய அரசர்கள் புகைப்படங்கள் மற்றும் பெயர் இருக்கையில், இம்மாமசூதியில் மட்டும் பெயரோ/புகைப்படமோ இல்லை! ஒருவேளை, கடவுளுக்கே "உருவில்லை"; நம் உருவம் எங்கே அதற்கு என்று மறுத்திருப்பரோ!!! ஏற்கனவே, அநேக ஆயுதங்களையும் கையில் கொண்டிருந்தும் "சாமி கண்ணைக் குத்திவிடும்" என்று "பேச்சிலும்" பயமுறுத்தி நம்பிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் மற்ற மதங்களில் (குறிப்பாய், நம் இந்து மதத்தில்) நடந்துகொண்டிருக்க இவர்களுக்கு எப்படி இது சாத்தியமாயிற்று? நம்பிக்கை என்பதன் உச்சமும், உதாரணமும் இவர்கள் தானோ?? இங்கே, ஒரு சிறு நிகழ்ச்சியை கூறிட விழைகிறேன்: என் பள்ளி நண்பனொருவன் இன்னுமொரு "முகம்மதிய நண்பன்" ஒருவனுடன் ஓர் விவாதத்த்தின் போது "செவுத்த(சுவற்றை)ப் பார்த்து கும்பிடற(வழிபடுகிற) உனக்கே அவ்வளவுன்னா; செலையை(சிலையை)ப் பார்த்து கும்பிடற எனக்கு எவ்வளோ இருக்கும்" என்று கூறினானாம்: அவனின் சமயோகித வசனத்தைக் கேட்டு நான் இரசித்தேன்; இதை என் மிகநெருங்கிய முகம்மதிய-நண்பனிடம் கூட கூறியிருக்கிறேன்; அவனும் அதை இரசித்தான்; ஓர்முறை எங்களுடன் 48 மைல் எங்களுடன் நடந்தே சபரி-மலை வந்தவன் - எங்களின் சோற்று-மூட்டையையும் சுமந்தவாறே! அவனின் பொறுமைக்கும், பெருந்தன்மைக்கும் நிகர் அவன் ஒருவனே!!!   

    மேற்கூறிய வசனத்தை நான் பலமுறை என்னுள் எண்ணி சி(ரி/ந்தி)த்திருக்கிறேன்; என் நண்பர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். ஆனால், உருவிலா-வழிபாடு என்பதை ஆழ யோசிக்கும் போது - மேற்கூறிய வசனம் எனக்கு வேறொரு உண்மையை உரைத்தது. ஆம்! முகம்மதிய சகோதர/ சகோதரிகளின் ஒருங்கிணைந்த மன-உறுதியை, நம்பிக்கையை அந்த வசனம் பறைசாற்றியதாய் உணர்ந்தேன். பல கடவுள்கள் பலவித ஆயுதங்களுடன் இருக்கும் என் இந்து மதத்தில் - எனக்கு கடவுளின் மீது நம்பிக்கையும்/ மரியாதையும் வருவதற்கு "சாமி, கண்ணைக் குத்திவிடும்" என்பது போன்று பலவிதங்களில் சொல்லி/பயமுறுத்தி வளர்த்தும்; முழுநம்பிக்கை வரவில்லை என்பதே உண்மை! ஒருவேளை, கடவுளுக்கு உருவே இல்லை என்பதால் தான், இது அவர்களுக்கு சாத்தியமாயிற்றோ? இவ்வளவு உருவகங்களை காட்டியும், பயமுறுத்தியும் எனக்கு வராத அந்த நம்பிக்கை; அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?? ஒருவேளை, ஆரம்பத்தில் அவர்களை மிக-வன்மையாய் கண்டித்து கடவுள் மீது நம்பிக்கை வரவைத்திருப்பரோ? இருந்திருக்கக் கூடும்; இருப்பின், அந்த வன்மை உகந்தது தானே! அதையும் தாண்டி, அதை இன்றுவரை ஒருங்கிணைந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நம் முகம்மதிய சகோதர/ சகோதரிகள் இன்னமும் உகந்தவர்கள் தானே? ஆம், முழுமையாய்/உண்மையாய் நம்பிக்கை கொண்டு இறைவனிடம் (அல்லது வேறொரு நபரிடமோ) சரணடைந்த பின் - நம்பிக்கையின்மை என்பது வருவதற்கு சாத்தியம் இல்லை தானே?? 

        சரி! இது ஏன், என் இந்து-மதம் உட்பட மற்ற அனைத்து மதத்தினருக்கும் வரவில்லை? ஒருவேளை,   மற்ற அனைவருக்கும் இது வன்மையாய் போதிக்கப்படவில்லையா?? போதித்தவர்களுக்கு பொறுமை போதவில்லையா அல்லது போதிக்கப் பட்டவர்களுக்கு நம்பிக்கை போதவில்லையா??? இந்த நம்பிக்கை இல்லாததால் தான், கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று உருவகப்படுத்தப்பட்டதா? ஏனெனில், இந்துமதத்தில்(கூட) கடவுள் உருவற்றவர் என்பது இருக்கிறது! அதனால் தான், "தூணும், துரும்பும், சாணமும், சாம்பலும்; இப்படிப் பலவும்..." கடவுள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!! ஒருவேளை, மற்ற நம்-அனைவருக்கும் உருவிலாத ஒன்றில்(வெறுமையில்) நம்பிக்கை இல்லையா? தெருவில் சென்று கொண்டிருக்கும் போது அல்லது தொலைவில் இருக்கும் கோவிலை நோக்கி கும்பிடுபவரைக் கண்டு நான் சிரித்திருக்கிறேன்; ஏன், என்னப்பன் அவ்வாறு செய்யும் போது கூட நகைத்திருக்கிறேன். இது போன்ற நகைச்சுவை காட்சிகள் திரைப்படங்களில் கூட வந்திருக்கின்றன! ஆனால், இப்போது ஒன்று புரிகிறது; அது என்னப்பன் மற்றும் அது-போல் செய்யும் அனைவரின் நம்பிக்கையை உணர்த்துவதாய் படுகிறது! இதைத்தானே நம் முகம்மதிய சகோதர/சகோதரிகள் செய்கிறார்கள்! மேலிருக்கும் "மக்கா-தொழுகை" புகைப்படத்தை உற்று கவனியுங்கள்! எத்தனை பேர் எத்தனை மைல்-பரப்பளவில் ஒருங்கிணைந்து தொழுகிறார்கள்? இப்போது சொல்லுங்கள்! உருவிலா வழிபாட்டால் தானே, இது சாத்தியம் ஆகியிருக்கவேண்டும்?? 

      இங்கே, ஓர் பேருண்மை என்னவெனில் - கடவுள்-படமே இல்லையெனினும் நான் வெறுமனே நின்று வணங்குவேன்; இப்போது(ம்) கூட, அபு தாபியில் என்-வீட்டில் அப்படித்தான் செய்கிறேன்! அப்படி இருந்து(ம்) நான் ஏன், மேற்கூறிய வண்ணம் என்னப்பன் செயல் கண்டு நகைத்தேன்? இங்கே, இன்னுமொன்று புரிந்தது; உருவிலா-கடவுள் மேல் எனக்கு(ம்) முழுதாய் நம்பிக்கையில்லை என்பதாய் படுகிறது; அதனால் தான் மற்றவரின் நம்பிக்கையை கண்டு நான் நகைத்திருக்கிறேன். இந்த "ஒருங்கிணைந்த" நம்பிக்கையைத்தான் முகம்மதிய சகோதர/சகோதரிகள் மேற்கூறிய புகைப்படம் மூலம் விளக்குகிறார்கள் என்று படுகிறது! ஆம், அதில் அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; மற்றவர் நம்பிக்கை மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் தெரிகிறது!! அதனால் தான் "ஒருங்கிணைந்து" என்ற வார்த்தையை அழுந்தப்பதிவு செய்திருக்கிறேன். இந்த ஒருங்கிணைந்த நம்பிக்கை இல்லாததால் தான், நமக்கு பல கடவுள்கள் தேவைப்படுவதாய் படுகிறது! அதன் விளைவாய் தான், ஒவ்வொருவரும் ஓர் குறிப்பிட்ட கடவுளை நோக்கி பயணப்பட்டு, பலவகையில் பணமும் செலவு செய்து "ஜருகண்டி, ஜருகண்டி" என்று தள்ளிவிட்டாலும் அந்த "கடவுள்(எனும்) சிலையை" காண உந்துகிறது! அதற்காக பெருவாரியான நேரத்தையும் செலவிட வைக்கிறது; இதைத்தான் வேறொரு கோணத்தில் முன்பொரு தலையங்கத்தில் விளக்கியிருந்தேன். அந்த பார்வை கூட, உருவழிபாட்டில் எனக்கில்லாத உடன்பாட்டின் மறு-வெளிப்பாடே! இப்படிப்பட்ட பல வியப்புகளின் விளைவே, இந்த கேள்வி…


இவர்களுக்கு(மட்டும்) உருவிலா வழிபாடு எப்படி சாத்தியமாயிற்று???

பின்குறிப்பு: விஸ்வரூபம் திரைப்படத்தில் கிருத்துவ பெண்மணி ஒருவர் இந்து-பெண்மணியை "நீங்கள், உங்கள் கடவுளை சிலுவையில் அறைவீர்களா" என்று கேட்பார்! அதற்கு அந்த இந்துப்பென்மணி சிறிது யோசித்துவிட்டு "இல்லை, கடலில் வீசிவிடுவோம்" என்பார். ஒருவேளை, அளவுக்கதிகமான கடவுள்கள் இருப்பதால் தான் கடலில் வீசுகிறோமா? அதைத்தான் கமல், எடுத்துரைக்க எண்ணினாரா?? அல்லது, நம் முகம்மதிய சகோதர/சகோதரிகளின் உருவிலா-வழிபாட்டின் உன்னதத்தை விளக்கிட எண்ணினாரா??? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக