ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

என்ன கல்விமுறை இது???


மூன்றுவயது குழந்தை
3-எண்ணைத் தொடர்ந்து
தவறாய் எழுதி;
தாயிடம் அடிவாங்குவது,
எவரால் விளைந்தது?
எவரை சாடுவது??

"கழுகை விரட்டும்
கோழியாய்" - காத்திட்டவள்;
தன்பிள்ளை எண்ணெழுத
தவறியதால், தடுமாறி;
"தன்னிலை தவறிய
தாயாய்" ஆனதெவரால்?

"என்குடும்பத்தை நேசிக்கிறேன்!"
என்றோர்பதிலை  உதைவாங்கி
அருவருப்புடன் கற்கும்;
அப்பிஞ்சு உள்ளந்தனில்
எங்கனம் ஐய்யா
எழும்? நேசமும்பாசமும்??

மூத்தவர் ஒருவர்
3-என்ற எண்ணைத்
தவறாய் எழுதிடின்
"தடுமாற்றம்" என்போர்;
முகம் மாறுவதேன்,
மூன்றுவயதோர் தவறிடின்?

இப்பிஞ்சு வயதிலேயே
இத்தனை சுமைகளிருப்பின்;
இவர்கள் தொலைத்திட்ட
இளமையை எங்குதேடுவர்?
இதுதானா கல்விகற்றோர்;
இயற்றிய கல்விமுறை?

பள்ளிகளே! குழந்தைகளை
பயிற்றுவித்தல் உங்கள்கடன்!
பயிற்றுவித்தலில் பகிர்தல்(மட்டுமே)
பெற்றோர் பொறுப்பென்பதை;
மறந்தஉங்களை மருந்துக்கும்
மன்னிப்பின்றி தண்டிப்பதெவர்?

அவ்வயது ஒத்தோரின்
அறிவுக்கேற்ற விகிதத்தில்;
"சராசரி"கல்வி(யே) அவசியம்!
"சமச்சீர்" அடுத்தகட்டமே!
ஓயாது-படித்தல் மட்டுமல்ல;
"ஓடியும்-விளையாடட்டும்" பாப்பாக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக