ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

பொறுமை(காத்து), மன்னிக்க(வும்)… நன்றி!!!



       பெரும்பாலும், மேலை நாடுகளில் இருக்கும் உணவு-முறைகள் மற்றும் உடை-வடிவங்கள் போன்ற சாதாரண விசயங்களை தான் நாம் பின்பற்ற முயல்கிறோம். அது போன்ற விசயங்கள் மட்டும் தான் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்திருக்கிறோம்; வருகிறோம். மேலும், அவ்வாறே நமக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஓர் சிலர் மற்ற நல்ல விசயங்கள் பற்றி பேசிடினும், பரவலாய் பேசப்பட்டதாய் தெரியவில்லை. எனவே, அந்த மாதிரி மேலை நாடுகள் பலவற்றில் உள்ள, எனக்கு பிடித்த விசயங்களைப் பற்றி இங்கே பகிர்ந்துள்ளேன். இந்த விசயங்களில் பல, நம் முன்னோர்களிடத்தில் சாதாரணமாய் இருந்தது; இப்போதும் அவ்வாறு சிலர் இருக்கின்றனர்; ஆனால், பெரும்பாலும் இந்த குணாதிசயங்கள் இப்போது மறைந்துவிட்டது என்பதே உண்மை. அதற்கு பலவேறு காரணங்கள் கூறப்படலாம்; அதை நியாயபடுத்த முயலலாம்; அனால், அந்த விசயங்களை பழக்கப்படுத்தினால் நமக்கு பெரும் நன்மைகள் உண்டாகும் - வாழ்க்கை இன்னும் இனிதாகும் என்பதையும் நாம் உணர வேண்டும். மேலை நாடுகளில் - பல அபத்தமான விசயங்கள் உள்ளன என்ற வாதம் வேண்டாம்; நல்ல விசயங்களும் அங்கே நிறைய உள்ளன - அவைகளை பின்பற்றுவதால் நன்மை நமக்கு தான் என்பதை உணர்தல் வேண்டும். உணவு, உடை போன்று நம் "இயற்கை சூழலுக்கு" ஒவ்வாத விசயங்களில் - அவர்களை பின்பற்ற நினைக்கும் நாம், அவர்களிடம் நிறைந்திருக்கும் இம்மாதிரி "மனிதத்தையும்" பின்பற்றுதல் அவசியம்!

   முதலில், அவர்களிடம் இருக்கும் பொறுமை குறித்து சொல்லிட எண்ணுகிறேன்; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வள்ளுவப்பெருந்தகை "பொறை உடைமை" எனும் அதிகாரம் மூலம் பொறுமை பற்று விளக்கி இருக்கிறார். இருப்பினும், நாம் சிறிய விசயங்களில் கூட பொறுமை காத்திட தவறுகிறோம். மிக சிறந்த உதாரணம் - வங்கிகள் துவங்கி மருத்துவமனை வரை பல அரசாங்க (அல்லது தனியார்) அலுவலங்களில் "வரிசையில்" நிற்பது; மேலைநாட்டினர் இதில் மிகுந்த பொறுமை காட்டுகின்றனர்; சிறிதும்  பதட்டமோ அல்லது கோபமோ கொள்வதில்லை; எத்தனை நேரமானாலும் அவர்கள் "முறை" வரும் வரை நிதானமாய் இருக்கின்றனர். அதே போல், முன்னே சென்றவர் எத்தனை நேரம் எடுத்துக்கொண்டாலும் அமைதியாய் இருப்பர். ஆரம்ப காலத்தில் - நான் அம்மாதிரி காத்திருக்கும் போது பெருங்கோபம் அடைத்திருக்கிறேன்; இன்னமும் கூட என்னால் முழுதும்-அமைதியாய் இருக்க முடியவில்லை. இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் ஆரம்பத்தில் நான் (மற்றும் என் போன்ற வெளிநாட்டினர்) மொழி-புரியாத காரணத்தால் மிக அதிகமான நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறேன் (குறிப்பாய் வங்கி மற்றும் குடியுரிமை பெரும் அலுவகங்களில்); ஒருபோதும், பின்னால் காத்திருப்பவரை பற்றி "சிறிதும்" கவலைப்பட்டதில்லை! பின் ஏன், மற்றவர் அம்மாதிரி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் போது எனக்கு கோபம் வருகிறது? ஏன் அந்த பொறுமையை "கையாள" எனக்கு தெரியவில்லை அல்லது கைகூடவில்லை??

    ஏனெனில், பெரும்பாலும் "நம் நாட்டில்" நாம் வரிசையில் நிற்பதில்லை; குறுக்கு-வழியை தான் தேடுகிறோம். இன்னமும் கூட, நான் இந்தியாவில் உள்ள வங்கிக்கு சென்றால் நேராய் "மேலாளரை" பார்த்து உடனடியாய் என் வேலையை முடிக்கத்தான் நினைக்கிறேன்; அவ்வாறே செய்கிறேன். அம்மாதிரி ஒருவர் கூட இங்கே "வரிசையை" மீறி சென்று வேலையை முடித்ததை நான் நேரில் கண்டதில்லை. தெரிந்தவர் என்றால், அலுவலர்கள் நலம்-விசாரிப்பாய் பேசுவார்களே தவிர அவர்களை வரிசையை தாண்டி வரச் சொல்வதில்லை. அதே போல், அனைத்து ஆவணங்களும் இருப்பின் - எந்த சிபாரிசும் தேவை இல்லை; அதற்கு அலுவலக நேரம் எவ்வளவோ அந்த நேரத்திற்குள் நமது வேலை முடிந்துவிடும். "கையூட்டு" என்ற ஒன்று இருப்பதற்கு எனக்கு தெளிவான சான்று கிடைக்கவில்லை; எனக்கு அந்த அனுபவமோ அல்லது நிர்ப்பந்தமோ வாய்க்கவில்லை. எங்கேனும் - "இந்தியன்" திரைப்படத்தில் கூறுவது போல் "கடமையை (அல்லது விதிமுறையை) மீறுவதற்கு வேண்டுமானால்" நடக்கக்கூடும். ஆனால், அது மாதிரி இம்மக்கள் பேசிக்கூட நான் கேள்விப்பட்டதில்லை; நாம் ஒரு காரியம் ஆகவேண்டும் என்று அவர்களின் ஆலோசனை கேட்கும்போது, ஒருபோதும் அவர்கள் இவர்களுக்கு "கையூட்டு" கொடுத்தால் காரியம் நடக்கும் என்று கூறியதில்லை. ஒருவேளை, அதனால் தான் இவர்களுக்கு (இது தவிர வேறு வழியில்லை என்பதால்) இம்மாதிரி பொறுமையாய் வரிசையில் நின்று (தான்) தங்கள் வேலைகளை முடிக்கவேண்டும் என்று இயல்பாய் வந்திருக்குமோ?

       இங்கே, ஒரு பெண்ணை ஒரு பெண்ணோ அல்லது ஆணோ சிறிது காலத்திற்கு பின் அல்லது விசேச நாளில் சந்திப்பின் கட்டியணைத்து கன்னத்தோடு-கன்னம் வைத்து முத்தம் கொடுப்பார். வந்த புதிதில் - அம்மாதிரி பார்க்கும் போது "அருவருப்பாய்" இருந்தது; உடன் பணிபுரியும் ஆண்கள் என் தலைமை அதிகாரியை (அவர் ஓர் பெண்) உடன் கூட அவ்வாறே செய்தனர். பின் தான், அது பற்றி அவர்களிடம் விளக்கம் கேட்டேன் - அது ஒரு பெண்ணை வாழ்த்தும் வழிமுறையாம்; நானும் ஒரு தயக்கத்துடன் ஆரம்பித்து இப்போது இயல்பாய் செய்கிறேன்.  முதன் முதலில் என் தலைமை அதிகாரியை அவரின் பிறந்த நாளன்று அவ்வாறு செய்ததும் - அவர் அடைந்த ஆனந்தத்தை என்னால் என்றும் மறக்க முடியாது! "வசூல் ராஜா" திரைப்படத்தில் வரும் கட்டிப்பிடி-வைத்தியம் கூட அவ்வாறே! எந்த உறவையும் - அன்புடன் கட்டியணைத்து பாருங்கள்!! அதிலிருக்கும் ஆனந்தமும், அந்த அன்பின் வலிமையையும் புரியும். பின்னர் யோசிக்கும்போது இன்னுமொரு நிகழ்வு புரிந்தது; நான் அடிக்கடி குறிப்பிடும் என் நெருங்கிய-நண்பனின் தாய் அவ்வாறே செய்வார். இன்றும் கூட, என்னை பார்த்ததும் கட்டியணைத்து "கன்னத்தில் முத்தமிடுவார்"; எனக்கு, அது மிகப்பெரிய வலிமையையும், ஆனந்தத்தையும் கொடுக்கும். என் நண்பனும் அவ்வாறே! அவனுக்கு(ம்) அது இயல்பாய் வரும்!! சில வருடங்களுக்கு பின் 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் "Tampa" விமான-நிலையத்தில் என்னை பார்த்ததும் ஆரத்தழுவினானே! அது ஓர் அனுபவம்!! அனுபவித்தால் தான் புரியும்!!!

      இறுதியாய், நன்றி மற்றும் மன்னிப்பு கோருதல்! நன்றி "எப்போதும் இல்லை" எனினும், அவ்வப்போது கூறிப்பழகி இருக்கிறேன். ஏனோ, நமக்கு "நன்றியை மறக்கக்கூடாது" என்ற உணர்வு ஆழப்பதிந்தது போல், "நன்றியை சொல்லில் உரைக்கவேண்டும்" என்பது பதியவில்லை என்று தோன்றுகிறது. சிறிய, விசயமாய் இருப்பினும் கூட நன்றி என்பதை கூறிப்பழகவேண்டும்; நான் இப்போது அதிகம் அதை வார்த்தையாய் கூறி வருகிறேன்; உண்மையில், அது ஓர் உன்னதாமான உணர்வு - பழக்கம்! அடுத்தது, மன்னிப்பு கேட்பது; ஏனோ, எனக்கு இன்னமும் கூட "மன்னிப்பு" கேட்பது உடனடியாய் நிகழும் விசயமாய் கைகூடவில்லை! அது உடனடியாய், வரவேண்டும்; "விருமாண்டி" திரைப்படத்தில் வரும்  "மன்னிக்கத் தெரிந்தவன் மனுஷன்; மன்னிப்பு கேட்கத்தெரிந்தவன், பெரிய மனுஷன்"! என்ற வசனம் அனுபவத்தின் வாயிலாய் வந்திருக்கவேண்டும்; என்ன ஒரு ஒருப்புதமான செய்தி! மேலைநாட்டில், பேசத்தெரிந்த-சிறிய குழந்தைகள் கூட இவைகளை இயல்பாய் சொல்கின்றனர் - அதுவும் அவர்களின் தாய்-மொழியிலேயே!!! நாம் "Sorry and Thanks" என்று ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் கூறுவோம்; ஆனால் "நன்றி மற்றும் மன்னிக்கவும்" என்று தமிழில் அவ்வளவு எளிதில் கூறமாட்டோம்! இம்மாதிரி நம்-மொழி வாரத்தைகளை உபயோகிக்க தயங்குவது - "ஐயா" என்பதற்கு பதிலாய் "Sir" என்று அழைப்பதில் துவங்குகிறது. மேற்கூறிய விசயங்கள் தவிர்த்து, கற்றுக்கொள்ள பல விசயங்கள் உள்ளன; நான் கூறியவற்றில் தவறு ஏதேனும் இருப்பின்…

    பொறுமை(காத்து), மன்னிக்க(வும்)… நன்றி!!!

பின்குறிப்பு: இம்மாதிரியான, பல விசயங்களுக்கும் காரணம் அவர்களிடம் இயல்பாய் அடுத்தவரை "பாராட்டும்" குணம் உள்ளது என்பதாய் படுகிறது. அதனால் தான், அவர்கள் எளிதாயும் அதிக அளவிலும் "I appreciate" என்று உபயோகிக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால், நாம் இந்த பாராட்டும் குணத்தை தான் முதலில் அடிப்படையாய் கற்க வேண்டும் என்று தெளிவாகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக