ஞாயிறு, ஜூன் 24, 2012

என் தமிழுக்கு வித்திட்டவர்...



        என்னுடைய தமிழின் தரம் படிப்படியாய் உயர்ந்து வருவதாய் ஓர் எண்ணம்! என்னுடைய படைப்புகள் கூட அடுத்த நிலை தரத்தை அடைந்திருப்பதாய் ஓர் உணர்வு; நான் தானே என்னுடைய படைப்புகளின் முதல் "இரசிகனாய்" இருந்திட முடியும்! அப்படியெனில், என்னுடைய படைப்புகளின் தரம் உயர்வதை எளிதில் உணரமுடியும் தானே? அந்த நம்பிக்கையின் அடிப்படையில், நான் பல நாட்களுக்கு முன்பே எழுதிட நினைத்திட்ட தலையங்கத்தை இந்த வாரம் எடுத்திருக்கிறேன். அது! என்னுடைய தமிழுக்கு வித்திட்டவர் யார் என்பதைப் பற்றி!! அவர் எப்படி என்னுள் தமிழ்-தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைப் பற்றி!!! என்னுடைய பள்ளி நாட்கள் துவங்கி, எப்படி என்னுள் இந்த விதையை விதைத்தார் என்பதைப் பற்றி எங்கனம் எழுதிட மறந்திட முடியும்? அவர் எத்தனை கடினமான மனநிலையில் இருப்பினும், எவ்விதமான தாக்குதலுக்கு உட்பட்ட சூழ்நிலையில் இருப்பினும் - நான் எப்போது வேண்டுமானாலும் - அவரிடம் என்னுடைய சந்தேகங்களை, என் கற்பனைகளை விவாதிக்க முடியும். இரு வாரங்களுக்கு முன் கூட என் கவிதையில் ஓர் "சொல்" குறித்து விவாதித்து என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொண்டேன். உண்மையில், மற்ற விசயங்களில் எப்படியோ?! இந்த விதத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்றே சொல்லவேண்டும். என் தமிழுக்கு வித்திட்டு அதை இன்றளவும் தேவையின்போது தண்ணீர் ஊற்றி வளர்த்து வருபவர் - என்னப்பன் புலவர். இளமுருகு அண்ணாமலை. ஆம்! என் உயிருக்கு வித்திட்டவரே, என் (தமிழ்)உணர்வுக்கும் வித்திட்டவர். 
   
      பொதுவாய், என் வாழ்க்கையை செம்மைப்படுத்த அவர் செய்த செயல்களை முன்பு "கும்பிடறேன்பா" என்ற தலையங்கத்தில் விவரித்திருந்தேன். அத்தலையங்கத்தில் விவரித்திட்ட அதே அடிப்படையில், என் தமிழறிவு வளர்வதில் கூட அவர் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை; மாறாய், என் பள்ளியின் சூழல் அதற்கு உதவியாய் இருக்கவேண்டும் என்பதற்காய் என் "பத்தாவது" வயதில் என் பள்ளியையே மாற்றினார். ஆனால், நான் என்னுடைய விருப்பின் பால் - என் தந்தையின் பெருமை காத்திட வேண்டி - நானே தான் விரும்பி தமிழை நேசிக்க ஆரம்பித்தேன். நான் படித்த தமிழிலக்கணம், இப்போது எனக்கு பெரிதாய் வழக்கத்தில் இல்லை! ஒவ்வொரு முறையும் விடுப்பில் இந்தியா செல்லும் போது, இலக்கணம் பற்றி என் தந்தையிடம் (மீண்டும்) கற்றிட வேண்டும் என முனைந்து நேரமின்மை காரணமாய் அது செயலாக்கபடாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இன்னும் ஓர் வாரத்தில், என் மகளின் பிறந்த நாளுக்காய் விடுப்பில் செல்கிறேன்; பார்ப்போம்! இந்த முறையாவது இலக்கணம் ஏதேனும் கற்க முடிகிறதா என்று!! அவருக்கும் வயது கடந்து கொண்டே போகிறது!!! அவரிருக்கும் போதே என் இலக்கண அறிவுக்கும் "பிள்ளையார் சுழி" போட ஆசைப்படுகிறேன்; அது அவருக்கு பெருத்த ஆனந்தத்தையும், கர்வத்தையும் கூட கொடுக்கக்கூடும். பெருந்தகையின் "மகன் தந்தைக்காற்றும் உதவி…" எனும் "குறள்" போல், இதை அவருக்காய் செய்திடல் வேண்டும். இந்த முறை செய்திடுவேன் என்ற நம்பிக்கை மிகுந்தே உள்ளது.

          என் பள்ளிக்காலத்தில், என் தந்தை தான் எனக்கு தமிழ் மற்றும் வகுப்பாசிரியர்; எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த வாய்ப்பு எனத் தெரியவில்லை! எனக்கு வாய்த்தது. எங்கள் (உயர்)பள்ளியில் (எட்டு முதல் பத்து வரையிலான வகுப்புகள் கொண்டது), காலை "கடவுள் வாழ்த்து/ தேசிய கீதம்" முடித்த பின் தினமும் ஒரு "திருக்குறள்" சொல்லவேண்டும் என்ற நியதி; "திருக்குறள்" என்றுரைத்ததும் - முன் வருவோர் - எவர் வேண்டுமானாலும் சொல்லலாம்; எந்த கட்டுப்பாடும் இல்லை. இது, என்னுடைய "எட்டாவது" வகுப்பில் துவங்கியது; முதல் ஓராண்டு "மூத்த மாணவி" ஒருவர் இருந்தார்; அவருக்கும் எனக்கு கடினமான போட்டி இருக்கும்! இதற்காகவே, இருவரும் முதல் வரிசையிலேயே நின்றிருப்போம் - ஓடி சென்று முதல் ஆளாய் சொல்ல!! உண்மையில், எவர் அதிகமான நாட்கள் சொன்னோம் என்று தெரியவில்லை; ஆனால், எங்கள் இருவர் தவிர யாரும் அதற்கு போட்டி போடுவதில்லை. நான் அடுத்த ஆண்டு சென்றபோது, அவர் பள்ளி இறுதியாண்டு முடித்து வேறு பள்ளிக்கு சென்று விட்டார்; அத்துடன், எனக்கு இருந்த ஒரே போட்டியும் இல்லாமல் போனது!!! ஆயினும், என் ஆர்வம் குறையவே இல்லை; வேறெவருக்கும் அந்த வாய்ப்பை எளிதில் விட்டுக்கொடுத்ததில்லை (ஓரிரு நாட்கள் தவிர). காலையில், உணவு உண்ணும் போதோ அல்லது பள்ளிக்கு கிளம்பும் போதோ தான் என் தந்தையிடம் ஓர் திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் சொல்லக் கேட்பேன். அவர், பொதுவான விளக்கம் சொல்வதோடு அல்லாது, அவரின் பார்வையிலான விளக்கத்தையும் சொல்லிக்கொடுப்பார்.

             அவரின் பார்வை கலந்த விளக்கம் தான் என்னைப் பலவழியில் பன்படச் செய்தது. அவரின் பார்வையில், என்னை மிகவும் கவர்ந்த திருக்குறள் "இளைதாக முள்மரம் கொள்க…" என்பது. முதலில், முள்மரம் பற்றி கூறி, பின் அதற்கு அவர் சொல்லிய விளக்கம் "நாமும், நம் தவறுகளை சிறிய வயதிலயே களைந்து விடவேண்டும்; இல்லையேல், பின்னாளில் அதை களைவது மிக்க சிரமமாய் இருக்கும்" என்பது தான். இங்கே தான், வள்ளுவனையும் எனக்கு மிகவும் பிடிக்கும்; "ஐந்தில் வளையாதது..." என்பதில் இருந்த மாறுபட்ட வள்ளுவனின் கருத்து. சிரமம் எனினும், எப்போதும் எதுவும் சாத்தியம் என்ற வள்ளுவன் வாக்கு! அதன் அடிப்படையில் தான் "ஐந்தில் வளையாதது" என்ற என் புதுக்கவிதையை எழுதினேன். பெருந்தகையும், எந்தந்தையும் கலந்து ஊட்டிய தமிழ் இது!! திருக்குறளுக்கு பின், என் தந்தைக்காய் நான் செய்தது; எந்த பள்ளியில் "தமிழ் மன்ற தேர்வு" நடப்பினும் அதில் கலந்து கொண்டு  முடிந்த அளவில் "முதல் பரிசு" வாங்கச் செய்தது; எத்தனை தேர்வுகள் வென்றேன் என்று உண்மையில் எனக்கு நினைவில்லை; அதற்கான ஆதாரங்கள் எதுவும் இப்போது கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. அதன் பின், பள்ளி கலைவிழாக்களில் கலந்து கொண்டு  பேசுவது! அத்தனை உணர்ச்சிகளையும், என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுப்பார். நான் பேசி, முடிந்ததும் என் தந்தையையும் முந்திக்கொண்டு என்னையும், என்னப்பனையும் பாராட்டிய ஆசிரியர்கள் நிறைய பேர். இது தற்பெருமை அல்ல; மாறாய், என் "தமிழ் ஆசான்" பற்றி விளக்கும் செயல்.

           இப்படியாய், பல விசயங்களை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்; ஆயினும், சுருங்கச் சொல்ல வேண்டும் என்பதால், இவ்வலைப்பதிவிற்காய் நான் எழுதிய ஓர் புதுக்கவிதையில் எழுந்த சந்தேகம் பற்றி கூறுகிறேன். அது "கணினி" என்ற புதுக்கவிதை; அதில் "கணி நீ" என்று ஓர் சொற்றொடரை எழுதியிருந்தேன். பின், "கணி" என்ற சொல் "தனித்து" நின்று நான் எதிர்ப்பார்த்த பொருளை கொடுக்குமா என்று ஓர் சந்தேகம். உடனே, என் என்னப்பனை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டேன். அவர் சிறிது யோசித்து விட்டு, அவ்வாறு வரலாம்; அதில் தவறில்லை என்றார்! மேலும், தமிழ் இலக்கிய மரபு எப்போதும் "புதிய சொல்லாக்கத்தை" ஆதரிக்கும் என்றார்!! அது எனக்கு புதிய தகவல்; அது தான் என் தமிழறிவுக்கு முக்கியம். வேறெவரும் இந்த சொல்லாக்கத்தை கையாண்டிருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை!!! ஆனால், உண்மையில் நான் இத்தகைய தந்தை கிடைத்ததற்காய் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இது போல், பல நேரங்களில் அவரின் உதவி கோரியிருக்கிறேன். இவ்வாறாய், என்னப்பன் வித்திட்டதன் மூலம் என் "கன்னி புதுக்கவிதையை" நான் எழுதிய ஆண்டு 1996. அது "பணம்" எனும் புதுக்கவிதை; அவ்வாறாய், நான் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளை கொண்ட "ஏடு" தொலைந்துவிட்டது. என் வீட்டார் எவரும், பழைய தாட்கள் வாங்குபவரிடம் கூட விற்றிருக்கக் கூடும். எனினும், இந்த வலைப்பதிவை ஆரம்பித்த பின் ஒருசில புதுக்கவிதைகள் எனக்கு நினைவுக்கு வந்தன; அதில் "பணம்" எனும் என் முதல் புதுக்கவிதையும் ஒன்று; அதை, சிறு மாற்றம் செய்து இவ்வலைப்பதிவின் முதல் வார பதிப்பிலேயே பதித்துவிட்டேன். இப்படியாய், என்னப்பன் வித்திட்ட இந்த தமிழுணர்வு மென்மேலும்…

செழிக்கும் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை!!!

பின்குறிப்பு: என் தந்தையின் தமிழறிவும், திறனும் அசாதாரணம்! இதை உணர்ந்தோர்க்கு தெரியும் என் கூற்று மிகையல்ல என்பது!! ஏனோ, சூழ்நிலை காரணமாய் அவரால் ஓர் எல்லை தாண்டி விரிவடைய இயலவில்லை; விரிவடைந்திருப்பின், தமிழ் வளர்ச்சிக்கு அவரின் பங்கு பெரிதாய் இருந்திருக்கும். அதற்கு, மிகச்சிறிய உதாரணம் - இவ்வலைப்பதிவில் "என்னப்பனின் பார்வை" என்ற பிரிவில் வெளியிட்டிருக்கும் அவரின் முதல் கவிதை; அது, முதல் பரிசும் பெற்ற "கோதுமை தந்த குணம்" என்ற ஈற்றடி வெண்பா. அதை எழுதும்போது அவருக்கு "இருபத்தைந்து" அகவை; எத்தனை அரசியல் ஞானம், அந்த வயதில் இருந்திருப்பின், அத்தகைய "வெண்பாவை" எழுதி இருக்க முடியும்? என் மகளுக்காய் அவர் எழுதிய பாக்களில் கூட அவரின் "அரசியல் கோபம்" வெளிப்பட்டிருக்கும்; வாய்ப்பும், விருப்பும் இருப்பின் அவைகளை ஓர் முறை படித்துப் பாருங்கள். ஏனோ! அவரை பெரிய அளவிற்கு வளரவிடாது அவர் சூழல் தடுத்துவிட்டது. என் தமிழறிவு, அவரைக்காட்டிலும் "மிகச்சிறியது" எனினும், என்னுடைய பங்களிப்பை எந்த தடையையும் தகர்த்து தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது தான் என் திண்ணமான எண்ணம்!!! எப்போதும் போல், என்னுடைய "தமிழுணர்வு" சார்ந்த இந்த புரிதலுக்கும் அவரின் வாழ்க்கையே எனக்கு பாடமாய் அமைந்திருப்பது கூட எனக்கு கிடைத்திட்ட வரமோ???                                     
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக