ஞாயிறு, ஜூன் 03, 2012

குழந்தைகளிடம் என்ன, ஏன் எதிர்பார்க்கிறோம்?...


             நாம் - குறிப்பாய் பெற்றோர்கள் - குழந்தைகளிடம் மிகவும் எதிர்பார்க்கிறோம்; பல சமயங்களில் சற்றும் நியாயமில்லாத - அந்த வயதில் சாத்தியமில்லாத - விசயங்களை எதிர்பார்க்கிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் சமுதாயத்தின் தாக்கம் - சமுதாயத்தில் இருந்து எழும் கேள்விகள் - என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், சமுதாயத்தின் மேல் பழியைப் போட்டுவிட்டு நம் செயல்களை நியாயப்படுத்துவது எந்த விதத்தில் சரியாகும்? நான் ஒரு முறை, இரண்டு வயது கூட கடக்காத, என் மகளை கூட கன்னத்தில் அறைந்ததை என்னுடைய முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். ஏன் அந்த தவறை செய்தேன் இன்றுவரை புரியவில்லை; ஆனால், என் மகளை ஒரு முறை அறைந்த பின் அதைப் பற்றி தீர யோசிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளிடத்திலுள்ள எதிர்பார்ப்பில், நாம் பல நேரங்களில் தன்னிலை தவறுவதை உணர்ந்தேன்; இந்த எதிர்பார்ப்புகளில், எனக்கு முக்கியமாய் முதலில் படுவது அதிக மதிப்பெண் எடுத்து வகுப்பில் முதல் மாணாக்கராய் தேர்ச்சி பெற வேண்டும் என நினைப்பது. இதைப்பற்றி நான் அதிகம் விவரிக்கப் போவதில்லை; ஏனெனில், இதைப்பற்றி மிகத்தெளிவாய் என்னுடைய இன்னுமொரு முந்தைய தலையங்கத்தில் விளக்கியுள்ளேன். நல்ல வேலை!!! உயர் மற்றும் உயர்நிலை பள்ளி இறுதியாண்டில் மட்டும் "மாநில அளவில் முதலிடம்" என்று பிரகனப்படுத்துகின்றனர். சற்று, யோசித்து பாருங்கள்! ஒவ்வொரு இறுதியாண்டு தேர்விற்கும் இது மாதிரி ஓர் விளம்பரம் இருப்பின், குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று?

               அடுத்து, அவர்கள் எந்த படிப்பை படிக்கவேண்டும் என்பதை திணிப்பது - இதில், சமுதாயத்தின் பங்கு பெரியது. நான் பத்தாம் வகுப்பு முடிக்கும் போது "பாலிடெக்னிக்" என்ற தொழில் சார்ந்த படிப்பு படிப்பதற்கு மிகப்பெரிய போட்டி இருந்தது. நான், உயர்நிலை பள்ளியில் விருப்பப்பட்டு தான் சேர்ந்தேன்; ஆனால், எங்கள் கிராமத்தில், ஏன்பா! "பாலிடெக்னிக்"-ல் இடம் கிடைக்கவில்லையா என்று கேட்டவர்கள் நிறைய பேர். இது தான் பிரச்சனை! கும்பல், கும்பலாய் சென்று ஓர் குறிப்பிட்ட படிப்பை மட்டும் படிப்பது!! குறிப்பிட்ட படிப்பை - படித்தவுடன் வேலை என்பது ஓர் எல்லை வரை தான் இயலும். மேலும், நாம் நம் குழந்தைகளை "சம்பாதிக்கும் இயந்தரமாய்" மட்டும் பார்க்ககூடாது. அதனால் தான், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாய் ஒரு குறிப்பிட்ட படிப்பை மட்டும் படித்தவர்களில் பெரும்பான்மையோனோர் இன்று எப்போது வேலை பறிபோகும் என்ற குழப்பத்தில் இருக்க காரணம். இப்படி குழந்தைகள் திறனும், ஈடுபாடும் எதில் உள்ளது என்பதை அறியாமல், எல்லோரும் சேர்கிறார்கள் என்பதற்காய் ஒரு படிப்பை படிக்க கட்டாயப்படுத்துதல் எந்த விதத்தில் நியாயம்? இந்த மாதிரி படிப்பை பெற்றோர்களும், சமுதாயமும் ஒரு குழந்தையின் மேல் திணிப்பது தான் அதிகம் என்பதால் தான், இதை அழுந்தச் சொல்கிறேன்.  இதில் சில பெற்றோர்கள் வித்தியாசமானவர்கள்; அவர்கள் தங்கள் பெற்றோர் நினைத்த படிப்பை படிக்கமுடியாததால் - தங்கள் குழந்தைகள் படிக்கவேண்டும் என்று விரும்புவது; இது என்ன நியாயம் ஐய்யா? இன்னும் சிலர், தாங்கள் செய்யும் தொழில் அல்லது தாங்கள் படித்த படிப்பையே தொடரும் படி வற்புறுத்துவது! இது தவறல்லவா??

          குழந்தைகளுக்கு என்ன தெரியும்?? என்ற விதண்டாவாதம் வேண்டாம். பெரும்பான்மையான குழந்தைகளுக்கு எந்த கல்வி அல்லது எந்த தொழில் சிறந்தது என்று "தெளிவாய்" தெரியாது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், உங்கள் குழந்தையின் தனித்திறன் என்ன என்பதை உங்களை விட, யார் - எங்கனம், சிறந்து கணித்துவிட முடியும்? அங்ஙனம் செய்யத் தவறி, எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காய் உங்கள் குழந்தையை கட்டாயப்படுத்துவது, உங்கள் தவறென்று எங்கனம் உணர மறந்தீர்கள்? எனவே, உங்கள் குழந்தைகளின் தனித்திறனை கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்; மேலும், அதனை சார்ந்த வேலையை தேர்ந்தெடுக்க உறுதுணையாய் இருங்கள்; குறைந்தது, அவர்களின் விருப்பம் என்ன என்பதை கேட்கவாவது செய்யுங்கள். படிப்பும், வேலையும் பொருளீட்ட மட்டுமல்ல; என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்! குழந்தைகளுக்கு விருப்பமாயும் இருக்கவேண்டும்!! பொருளீட்டுதல் என்னும் எண்ணம் ஓர் குறிப்பிட்ட காலம் வரை உந்திச் செல்ல உதவலாம்; ஆனால், அந்த கடன் தீர்ந்தவுடன் அது அவர்கள் விருப்பம் சார்ந்தும் இருக்கவேண்டும். நாம் - குறிப்பாய் பெற்றோர்கள் - குழந்தைகள் அனைத்திலும் சிறந்ததாய் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். ஒரு இயந்திரத்தை வாங்குவது போல, குழந்தை கூட இளமையிலேயே ஒரு தொகுப்பாய் (package) இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். இயந்திரம் வேண்டுமானால், எல்லோரிடமும் ஒரேமாதிரி இருக்கலாம்; ஆனால், எல்லா குழந்தைகளும் ஒரேவாறு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றுங்கள்.

          நாம் நம் குழந்தைகளின் வெற்றியின் அடிப்படையில் - நாம் வெற்றி பெற்றதாய் காட்டிக்கொள்ள முயல்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது! அதனால் தான், நாம் படிக்காத படிப்பு, நாம் படிக்கத் தவறிய படிப்பு, நாம் செய்யாத வேலை, நம்மால் செய்ய இயலாத வேலை என்று நம் கடமைகள்/ எண்ணங்கள் அனைத்தையும் அவர்கள் மேல் திணிக்க எத்தனிப்பதாய் தோன்றுகிறது. அவர்களுக்கென்று ஓர் உலகம் உண்டு; அதில் அவர்களின் விளையாட்டு உண்டு, அவர்களின் கனவு உண்டு, அவர்களின் விருப்பு-வெறுப்பு உண்டு என்பதை உணர்வோம்; அதை, அவர்களின் "தார்மீக உரிமை" என்று உணர்ந்து அதை அவர்களுக்கு விட்டுகொடுப்போம். நாம் முதலில் - நம் தாய் தந்தையரை மரியாதையாய் நடத்த, அவர்களிடம் மரியாதையாய் பேச கற்றுக்கொள்வோம். நான், என் தாய்-தந்தையரை ஒருமையில் தான் அழைப்பேன்! ஆனால், நீ என்னை மரியாதியாய் அழைக்கவேண்டும்!! என்ற பிடிவாதத்தை மாற்றுவோம். என் நண்பன் ஒருவன், அவனின் தாய்-மாமனை (அவருக்கென்று குடும்பம் இல்லை) ஒருமையில் தான் அழைப்பான்; அவனின் பெற்றோர்களும், தம்பிகளும் கூட அவ்வாறு தான் அழைப்பார்கள்; அவனின் மகளும் இப்போது அப்படித் தான் அழைக்கிறாள். அதையும் அவன் பொருட்படுத்தவில்லை; ஒரு மனிதனை மூன்று தலைமுறைகள் மரியாதையாய் நடத்தவில்லை. இதே போல் சூழல் உள்ள ஓர் குடும்பத்தில், அந்த கடைசி தலைமுறையை மட்டும் அந்த-மாதிரி உறவை "மரியாதையாய்" நடத்த சொல்லி ஓர் அறவுரை எழும் பாருங்கள்! அது தான் மிகக்கொடியது!!!. உடனடியாய் அக்குழந்தை மட்டும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஏன் பிடிவாதம் பிடிக்கிறோம்?

         நம் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிடுதலில் பெரும்பான்மையான பிரச்சனைகள் வருவதாய்  எனக்கு படுகிறது. "என் குழந்தைக்கு இரண்டு மாதத்திலேயே "பல்" முளைத்துவிட்டது தெரியுமா?" என்பதில் துவங்குகிறது இந்த ஒப்பிடுதல்; ஆயின் என்ன? ஆனால், அவ்வாறல்லாமல் காலதாமதமாய் பல் முளைக்கும் குழந்தைகளின் பெற்றோர்களை அது பதட்டப்படுத்துகிறது என்பதை அறிவோம்; இந்த பதட்டம் பின்னர் அவர்களின் குழந்தைகளை சென்று சேர்கிறது. இங்கு துவங்குவது தான் பின் - படிப்பு, வேலை, மரியாதை கொடுத்தல் என்று பட்டியல் நீண்டு செல்கிறது. அதே போல், ஏதேனும் ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலை தெரிவிப்பின், அக்குழந்தைகளை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தூற்றாமல் இருப்போம்; அம்மாதிரி செயல்தான் மற்ற பெற்றோர்களை பெரிதும் பாதிக்கிறது. எப்படி நம் பிள்ளையின் பெருமையை நம் வெற்றியாய் கருதுகிறோமோ, அதேபோல் சில குழந்தைகளின் வீழ்ச்சி அந்த பெற்றோர்களின் தோல்வியாய் நினைக்க வழிவகுக்கிறது என்பதை உணர்வோம். இங்கே, பெற்றோர்களின் பங்கு குழந்தைகளை நல்லவிதமாய் வளர்ப்பதில் மட்டும் தான் உள்ளது; அதை தன் கடமையை மட்டும் தான் பார்க்கவேண்டும். மாறாய், நம்முடைய எதிர்பார்ப்புக்களை, ஏக்கங்களை அவர்கள் மீது திணிப்பது சரியானது அல்ல; அது குழந்தைகளின் சுயத்தை அழிக்க வித்திடுகிறது என்பதை உணர்வோம்.

     அப்படியாயின், நம்முடைய குழந்தைகள் நன்றாய் இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கக்கூடாதா? அது தவறா?? என்ற வாதம் வேண்டாம். கண்டிப்பாய், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் இருக்கவேண்டும். என்னுடைய வாதம், அதை சரியான முறையில் சரியான அளவில் - அவர்களின் தனித்தன்மையை உணர்ந்து செய்யவேண்டும் என்பதே!. அதன் அடிப்படையில் தான், "குழந்தை வளர்க்க" என்ற புதுக்கவிதையை எழுதி இருந்தேன். நான் கூறியது, நாமும் குழந்தையாய் மாறவேண்டும்! அந்த குழந்தைப் பருவத்தை நாமும் அடையவேண்டும்!! நாமும் அதைக் கடந்து வந்தவர்கள் தானே!!! அதனால், நம்மால் எளிதில் அந்த மனநிலைக்கு செல்லமுடியும். நம் குழந்தைப்பருவ செயல்களை நினைத்தாலே போதும்; நாம் கண்டிப்பாய் நம் குழந்தைகளின் செய்கைகளை, அவர்களின் தேவைகளை/ வேதனைகளை புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றுகிறது. நாம் வளர்ந்துவிட்ட ஒரே காரனத்திற்காய், எல்லா செய்கைகளையும் ஒரே நேரத்தில் ஓர்  குழந்தையிடம், மேற்கூறிய வண்ணம் ஒரு "தொகுப்பாய்" எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை! நம் குழந்தைகளின் ஒவ்வொரு செய்கையையும் - குறைந்த மதிப்பெண் பெறுவதில் துவங்கி - நம்முடைய குழந்தைப் பருவ செய்கைகளுடன் ஒப்பிட்டாலே போதும்! நம்முடைய பெரும்பான்மையான  எதிர்பார்ப்புகளும், அதன்பால் தொடரும் வற்புறுத்தல்களும் குறைந்துவிடும்.

எதிர்பார்ப்புகள் எளிமையாய், குழந்தைகளின் திறனறிந்து இருக்கட்டும்!!!      
                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக