திங்கள், மே 14, 2012

தமிழ் உணர்வு...



        சென்ற வாரம் வேலை நிமித்தமாய் "இலண்டன்" மாநகரம் சென்றிருந்தேன். வேலை முடித்து அந்த வார இறுதியில், "சௌத்தாம்ப்டன்" நகரில் இருக்கும் என் நண்பனும், உறவுக்காரனும் (அத்தை மகன்) ஆன "மச்சானை" சந்திக்க சென்றிருந்தேன்; "மச்சான்" என்பது சரியான எழுத்து-நடை தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை! ஆனால், நாங்கள் அவ்வாறே அழைத்துக்கொள்வோம்!! அது எங்களுக்கு பிடித்தும் இருப்பதால் அவ்வாறே குறிப்பிட விரும்புகிறேன். அங்கே தமிழ் உணர்வு சார்ந்து நான் கொண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வது தான் இந்த தலையங்கத்தின் நோக்கம். பெரும்பாலும், வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்களின் குழந்தைக்கு தமிழ் பேச தெரியாது அல்லது மற்றவர்களுடன் உரையாடும் அளவுக்கு தெரியாது! அந்த குழந்தைகள் அவர்களின் (ஆங்கிலம் தெரியாத) தாத்தாக்கள் மற்றும் பாட்டிகளிடம் உரையாடுவதே இல்லை! அல்லது உரையாடுவது மிகவும் சிரமம்!! என்று கூறியே கேட்டிருக்கிறேன். என்னதான் தாத்தாக்கள், பாட்டிகள் தங்கள் "பெயரக்"குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் உரையாடிக்கொன்டாலும், "பெயரா" அல்லது "பெயர்த்தி" என்று அன்புடன் அழைக்க ஏக்கம் (ஒரு கணமாவது) எழும் தானே? ஆனால், என்னை "புகைவண்டி" நிலையத்தில் பார்த்தவுடன் "மாமா" என்று அன்புடன் அழைத்ததில் துவங்கி என் மச்சான் மகளின் தமிழும், அவளின் உச்சரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த தமிழறிவு எப்படி சாத்தியம் என்று வியந்தேன்.

      அடுத்த நாள் அதற்கு விடை கிடைத்தது! அந்த பெண் தான் பயிலும் பள்ளியில் தமிழ் பாடம் இல்லை எனினும், தனியாய் "தமிழ் பாடம்" பயில்வதை அறிந்தேன். அவள் தனது தமிழ் புத்தகத்தையும் என்னிடம் காண்பித்ததாள்! அதிசயத்து நின்றேன்!! அவள் இண்டாம் நிலை தமிழ் பயின்று கொண்டிருக்கிறாள்!!! மொத்தம் பன்னிரண்டு நிலைகள் இருக்கின்றனவாம். அவள் பயிலும் சில பாடங்கள், தமிழகத்தில் பயிலும் மாணாக்கர்கள் கூட பயில்கின்றனரா என்பது எனக்கு சரியாய் தெரியவில்லை! அத்தனை அருமையான பாடத் திட்டங்கள்; உண்மையில் எனக்கே அதில் நிறைய விசயங்கள் தெரியவில்லை/ புரியவில்லை! அவளின் உச்சரிப்பு அதிக தமிழுணர்வு கொண்ட வேறு நாட்டில் வாழும் தமிழர்களின் உச்சரிப்பு சார்ந்து இருக்கிறது; எவரென்று பிற்பாடு விளக்கி உள்ளேன். அவள் பேசும்போது, அந்த உச்சரிப்பு மிகவும் வசீகரமாய் இருக்கிறது; என் மச்சானின் தமிழ் உச்சரிப்பும் கிட்டத்திட்ட அவ்வாறே மாறிவிட்டதையும் உணர்ந்தேன்; சகோதரி (என் மச்சானின் மனைவி) கூட அவ்வாறே பேசி பழகுவதை அறிந்தேன். சர்வதேச அளவில் இம்மாதிரி வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்காகவே ஓர் அமைப்பு இருப்பதாயும், இதை பல்வேறு நாடுகளில் நடைமுறைப் படுத்திக்கொண்டிருப்பதாயும் என் மச்சான் தெரிவித்தான். இவ்வாறு நடைமுறையில் இருப்பது தெரியாது என் போல் பலர் இருப்பர் - அவர்களிடம் இச்செய்தியை கொண்டு சேர்ப்பதே என் நோக்கம். இது ஒரு சிலரையாவது சென்று சேர்ந்தால் அதுவே எனக்கு போதுமானது.

    முன்பே குறிப்பிட்டது போல் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு "தமிழ் தெரியாது" என்று சொல்வதற்கு காரணம், இம்மாதிரி வாய்ப்பு இல்லாதது கூட காரணமாய் இருக்கலாம்; ஆனால், அவர்களுக்கு உண்மையில் தமிழ் உணர்வு இருப்பின் இந்த வசதியை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு  வர செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. அந்த அமைப்பை தொடர்பு கொண்டாலே போதுமானது; அவர்கள் அதற்கு வழிமுறை சொல்வார்கள்; ஆனால், அதற்கு முதலில் "தமிழுணர்வு" வேண்டும். தமிழ் உணர்வு உள்ளதால் தான், என் மச்சானும் மற்ற தமிழ் குடும்பங்களும் சேர்ந்து அதைத் தான் "சௌத்தாம்ப்டன்" நகரில் செய்கிறார்கள். இது மாதிரி அனைவரும் செய்ய முன்வரலாம்; கண்டிப்பாய் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திற்கும் அருகே பத்து குடும்பங்களாவது எல்லா நாட்டிலும் இருக்கும். அவர்கள் ஒன்று சேர்ந்து இதை நடைமுறைப்படுத்த முயலலாம். என் மச்சான், அவனின் குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்கள் இட்டுள்ளான்; உண்மையில் அவனின் தமிழுணர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நம்மில் பலர், பெயரில் என்ன இருக்கிறது? என்று எண்ணுவதாலாயே தான் ஆங்கிலமும், வேற்று மொழியும் கலந்து பெயர் வைக்கிறோம். "தொண்டை" தாண்டியதும் சுவை தெரியாத உணவில் கூட அதிக கவனம் செலுத்துகிறோம்; ஆனால், நம் வாழ்நாளையும் தாண்டி நிலைக்கும் "பெயரில்" உள்ள மகிமையை தான் என் வலைப்பதிவின் முதல் தலையங்கத்தில் என் மகளின் பெயர் பிறந்த காரணத்தைக் கொண்டு  விளக்கி இருந்தேன். 

         இந்த தமிழுனர்வை கண்டு வியந்த பின், அவர்கள் இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கு ஓர் முறை பல தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடி தமிழ்க்கடவுள் "முருகனை" வழிபடும் நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது. முதலில், என்ன இது ஓர் "புகைப்படத்தை" மட்டும் வைத்துக் கொண்டு வழிபடுகிறார்களே என்ற எண்ணம் எழுந்தது; பின், அதை தானே நான் என்னுடைய வீட்டில் தினமும் செய்கிறேன் - அதில் என்ன தவறு இருக்கிறது என்ற "நியாயமும்" பிறந்தது. அந்த வழிபாட்டு தளத்தை அவர்கள் "ஹாம்ப்ஷையர் கந்தன்" என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அவர்கள் ஒன்றாய் கூடி தமிழில் முருகனை துதித்து பாடுகிறார்கள்; அதில், தமிழ் பயிலும் மேற்குறிப்பிட்ட குழந்தைகளும் அடக்கம் - அவர்களும் ஒழுக்கமாய் அதை செய்கிறார்கள். வழிபாடு முடிந்ததும் குழந்தைகள் சமீபத்தில் கற்ற திருக்குறளும், பழமொழிகளும் சொல்கின்றனர்; தெளிவாயும் சொல்கின்றனர். என் மகள், தமிழ் பேசும் சூழலில் இருப்பது மட்டுமல்லாது, தமிழ்க் குடும்பத்தில் இருந்து வந்த என்னவள் சொல்லிக்கொடுத்து, திருக்குறள் சொல்வதை அத்தனை ஆனந்தத்துடன் என் சமீபத்திய தலையங்கத்துடன் கூட தொடர்பு படுத்தி எழுதி இருந்தேன். ஆனால், இந்த குழந்தைகள் முற்றிலும் மாறுபட்ட சூழலில் இருந்து இத்தனை கற்பதை எண்ணி மிகவும் மனம் மகிழ்ந்தேன். என்னதான் என் மகள் மிகச்சிறிய வயதிலேயே தெளிவாய் திருக்குறள் ஒப்பிப்பினும் - உண்மையில், இந்த குழந்தைகளின் சூழல் சார்ந்து உணர்ந்து பார்த்தால் - என் மகளின் செயல், கண்டிப்பாய் இதை விட பெரிது இல்லை!!!

   என்னுடைய மேற்கூறிய அனுபவத்தில் கண்ட குடும்பங்களில் பெரும்பான்மையோனோர் "இலங்கைத்"தமிழர்கள். அவர்கள் உச்சரிப்பின் தாக்கமும்/ சாயலும் தான் என் மாச்சானின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தது. அவர்களின் இந்த அசாத்திய முயற்சியும், தமிழையும் தமிழ்ப் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைவும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களின் செயலை பாராட்டிய அதே வேலையில், அவர்களுக்கு மாத்திரம் ஏன் இந்த எண்ணம் மேலோங்கி உள்ளது என்றும் யோசிக்க ஆரம்பித்தேன். ஒருவேளை அவர்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்த வேதனையில், வேகத்தில் இருக்கக்கூடும் என்று முதலில் எண்ணினேன்; பின்னர், நான் அவ்வாறு ஒரு முடிவுக்கு வரின், அது அவர்களின் "தமிழ் உணர்வை" சற்று குறைத்து மதிப்பிடுவதாய் ஆகிவிடும் என்று உணர்ந்தேன். நான் கூட உறவு முறையை அவர்கள் அழைக்கும் விதம் பற்றி (அவர்களின் மொழி உணர்விற்கு ஓர் உதாரணமாய்) முன்னொரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்திய தமிழர்களிடம் இந்த உணர்வு பலமாய் இல்லாததாய் படுகிறது. இல்லை எனில், என் குழந்தைக்கு  "தமிழ் தெரியாது" என்பதை பலர் "கௌரவமாய்" எண்ணி கூறுமாட்டார்கள். எந்த ஒரு "இலங்கைத் தமிழனும்" - எந்த சூழலில் இருப்பினும் - தன் குழந்தைக்கு தமிழ் தெரியாது என்று கூறுவதாய் எனக்கு தெரியவில்லை. முடிவில், என்னுடைய "சௌத்தாம்ப்டன்" பயணத்தில் இருந்து தமிழ் பயிலவோ, தமிழ் பண்பாட்டை பின்பற்றவோ நமக்கு வேண்டியது, கண்டிப்பாய்...

தமிழ் உணர்வேயின்றி, வேறில்லை!!!  

பின்குறிப்பு: "ஹாம்ப்ஷையர் கந்தன்" வழிபாட்டு முடிவில், குழந்தைகள் சொல்லும் திருக்குறள் மற்றும் பழமொழிகளில் ஒரு சிறு மாற்றம் வேண்டும் என்று தோன்றியது. உடனே, அவர்களிடம் சொல்ல முனைந்து, பின் அவர்கள் அத்தனை பரிச்சயம் இல்லாததால் என் மச்சானிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அந்த மாற்றம் இவை தான்: 1. திருக்குறள் சொல்லிய பின் குழந்தைகள் - அதன் பொருளையும் சொல்லி பழங்கவேண்டும்; முடிந்தால், அப்பொருளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு சொல்லுதல் வேண்டும்; 2. "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது" போன்ற பழமொழிகளை கற்றுத்தருவதை (அன்று இந்த பழமொழியை குழந்தைகள் கூறினர்) நிறுத்தவேண்டும்; அது சரியான பழமொழியே அல்ல என்பதை என் புதுக்கவிதை ஒன்றில் கூறியிருக்கிறேன் - இது போன்றவை குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என்பது என் திண்ணமான எண்ணம்.                                                
                              

4 கருத்துகள்:

  1. அன்பிற்கினிய மச்சானுக்கு,
    முதற்கண் எங்களுடய முயற்சியை பறைசாற்றியதற்கு நன்றி!. எங்களின் முயற்சிகளை முழுமையை நோக்கி கொண்டுசெல்ல நிச்சயம் முயற்சிப்போம், அதில் உன்னைபோன்றோரின் கருத்துகள் மிக முக்கியம். நேரமின்மையின் காரணமாக சில நேரம் உன்னை பாரட்ட நினைத்தும் முடியாமல் போனதுண்டு, அதை நீ பொருட்படுத்த மாட்டாய் என தெரியும், அதே நேரம் சிறார்களுக்கு மட்டுமல்ல பெரியோர்க்கும் அதுதான் ஊக்க மருந்து என எனக்கு தெரியும். உன்னோடைய படைப்புகள் அபாரம், உன்னுடைய தமிழ் தொண்டு நீடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    - செந்தில் முருகன்.

    பதிலளிநீக்கு
  2. தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்ய வேண்டும் மகாகவி பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று கூறியதன் வாயிலாகத் தமிழை இனிய மொழி என்று கூறினார். அவர் மேலும்,

    ‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்றார். அத்தகைய தமிழ் மொழியை அதன் சுவை, ஓசை குறையாமல் போற்றி வளர்ப்பதே நம் கடமையாக இருக்க வேண்டும். ஆங்கில மோகம் தலை விரித்தாடும் இக்காலக் கட்டத்தில் மொழியாசிரியர்கள், புத்தம் புதிய உத்திகளாலும் தளராத உழைப்பினாலும் மட்டுமே மாணவர்களை ஆர்வமுடன் தமிழைப் பேச வைக்க இயலும். அத்தகைய நல்ல அமைப்பை பற்றி இன்னும் விரிவாக குறிப்பிட்டு இருக்கலாம்.இந்த அமைப்பை உலகமெலாம் பணியாற்றிட ஊக்கப்படுத்த வேண்டும்.செந்தில் முருகன் மற்றும் இந்த அமைப்பை சேர்ந்த இலங்கை தமிழர்களுக்கு எனது இதயம் கனிந்த வணக்கம்.உங்களை போன்றவர்கள்,உங்களின் பண்பை பேணி நாளும் பெருக வேண்டும்.வளமாக நம் தமிழ் வாழ வேண்டும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. விளையாட்டுக் கட்டம்

    கட்டங்கள் அமைத்து அக்கட்டங்களுக்குள் சொற்களை நிரப்பி சில குறிப்புகளைத் தந்து அக்குறிப்புகளைக் கொண்டு கட்டத்தில் உள்ள சொற்களைக் கண்டுபிடிக்கச் செய்தல்.



    குறிப்பு:

    1. காட்டில் ராஜா சிங்கம்
    2. உலகின் சந்தை சிங்கப்பூர்

    இதன் வாயிலாக, பேச்சுத் திறன் மட்டுமல்ல சிந்திக்கும் திறனும் உருவாகும் அல்லவா?
    இது போன்றும் விளையாட வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. ஆனந்த்,

    அருமையான யோசனை! வாய்ப்பு கிடைக்கும் போது, அந்த தமிழன்பர்களுக்கு இதை தெரிவிக்கிறேன். எனக்கும், அந்த அமைப்பை பற்றி விரிவாய் எழுத ஆசை தான்; ஆனால், அது ஒர் விளம்பரம் போல் ஆகிவிடும் என்பதால் தவிர்த்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு