ஞாயிறு, மே 20, 2012

கோடை(விடுமுறை) முகாம்...


      சில நாட்களுக்கு முன் நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி படித்தேன். அது! குழந்தைகளுக்கான "கோடை(விடுமுறை) முகாம்" நடத்துபவர்கள் அதிக கட்டணம் வசூலித்துக்கொண்டு சரியான முறையில் பராமரிப்பதில்லை; குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்பன போன்ற பெற்றோர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள். இந்த செய்தியை  படித்ததிலிருந்து, இக்குற்றச்சட்டுகளுக்கான காரணங்களை அலசுவதை விட்டுவிட்டு இந்த "கோடை(விடுமுறை) முகாம்" என்பதே எதற்காய் வந்திருக்கக் கூடும்; அதற்கு மாற்று என்ன என்பதை யோசிக்க ஆரம்பித்தேன். நம்மால் செய்ய இயலாத ஒரு காரியத்தை செய்ய ஒருவரை அணுகுகிறோம்; அதை செய்ய அவர் பணம் வசூலிக்கிறார்! ஆனால், நாம் செய்யும் அனைத்தையும் - அதே விதத்தில் - அவர்களும் நம் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்று எண்ணுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? நமக்கு ஒன்றோ அல்லது இரண்டோ தான் குழந்தைகள்! அவர்கள், பல குழந்தைகளை பார்த்துக்கொள்கின்றனர்; அவர்களைப் பொறுத்தவரை அது இன்னுமொரு குழந்தை; அவ்வளவு தான். அந்த அடிப்படையில் தான் குழந்தைக்கு தேவையான அன்பும், ஆதரவும் கிடைக்கும். எனினும், இந்த முகாம்களை சிறப்பாய் செய்பவர்களும் உள்ளனர்  என்பதை மறுப்பதற்கில்லை; அவர்களுக்கு என் மனம்கனிந்த பாராட்டுக்கள்.

           இந்த மாதிரி முகாம்களை நாம் நாடி செல்ல காரணம் முதலில், பொருளாதாரப் பிரச்சனை என்று படுகிறது. அதாவது, பொருளாதாரப் பிரச்னையை சமாளிக்க தாய்-தந்தை (கணவன்-மனைவி) இருவரும் வேலைக்கு செல்வது தான் முக்கிய காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. இருவரும் வேலைக்கு செல்வதால், தங்கள் குழந்தைகளை விடுமுறை காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரமாவது பார்த்துக்கொள்ள இது மாதிரி முகாம்களில் சேர்த்துவிடுகின்றனர் என்பதே உண்மை. இது அவர்கள் தொழில் சார்ந்து பார்ப்பினும் அல்லது அவர்கள் சூழல் சார்ந்து பார்ப்பினும் சரியாய் இருப்பதாகவே படுகிறது. ஆனால், இதை நாம் - குழந்தைகள் பார்வையில் இருந்து பார்க்கத் தவறுவதாய்  தோன்றுகிறது! குழந்தைகளுக்கு விடுமுறை என்று கிடைப்பதே அவர்கள் "இளைப்பாரத்தான்"; அந்த தருணத்தில் கூட அவர்களை இந்த மாதி "விடுமுறை முகாம்" களுக்கு அனுப்பியோ அல்லது பள்ளிகள் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை சொல்லிக் கொடுப்பதோ எங்கனம் நியாயமாகும்? அவர்களுக்கும் தானே, ஒரு இடைவெளி (BREAK) தேவைப்படுகிறது? குழந்தைகளும் ஆரம்பத்தில் சில நாட்கள் இம்மாதிரி முகாம்களில் மகிழ்ச்சியாய் விளையாடக் கூடும்; ஆனால், அதன் பின் அவர்களுக்கு ஒரு வெறுமை தான் மிஞ்சும் என்பதை மறுக்கமுடியாது. ஏனெனில், குழந்தைகள் தொடர்ச்சியாய் அடிக்கடி மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள்; அது அவர்களின் இயல்பும் கூட. எனவே தான் ஒரு கட்டத்தில் அது அவர்களுக்கு பிடித்தமில்லாதாய் போகிறது/போகக்கூடும்.

       குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும், அம்மா! நீங்கள் கொடுத்த பொருட்களை அவர்கள் சாப்பிட்டுவிட்டு எனக்கு கொஞ்சம் தான் கொடுத்தார்கள் என்றால் நீங்கள் எப்படி பதருவீர்கள்? இந்த குறுகிய காலத்தில் அவர்கள் சில தீய பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டு  வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?? பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் தான், "கோடை(விடுமுறை) முகாம்" தேவைப்படுகிறது,  என்பது எனக்கும் புரிகிறது; ஆயின் அதற்கு மாற்று என்ன என்று தான் நான் யோசித்தேன். இப்படியே அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிப்படிப்பையும் முடித்து வேலைக்கு சென்ற பின் அவர்களுக்கு எங்கே கிடைக்க போகிறது ஓய்வு??? பிறகு, பெற்றோர்களுக்கும், அவர்களுக்கும் உண்டான பாசப்பிணைப்பு வளர்வது எங்கனம்? குறைந்த பட்சம், அந்த பாசம் நம் குடும்பத்தை சார்ந்தவர்களிடம் இருந்தாவது கிடைக்க வேண்டாமா?? அதைத் தான் "கூட்டுக் குடும்பம்" என்ற ஒன்று செய்து வந்தது. கண்டிப்பாய், கூட்டுக் குடும்பத்தில் அதிக சண்டை-சச்சரவு இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், அந்த கூட்டுக் குடும்பத்தில் கிடைக்கும்  மகிழ்ச்சி அதை விட பன்மடங்கு பெரியது. குறைந்த பட்சம் விசேட காலங்களிலாவது,  இன்னமும் "கூட்டாய்" இருக்கும் சில குடும்பங்களை நான் "பொறாமையாய்" பார்ப்பதுண்டு. எந்த காரணமும் இல்லாது - சந்தோசத்தை முன்னிட்டு - பல விசேட காலங்களில் அந்த குடும்பத்தோடு நான் சேர்ந்து இருந்ததுண்டு. இன்னமும், கூட அவர்கள் மேல் "பாசம் கலந்த" ஓர் பொறாமை உண்டு.

    சரி, கூட்டுக் குடும்பம் தான் சிதைந்து விட்டது; அந்த உறவுகளிடமாவது - நெருங்கி இல்லாவிட்டாலும் - ஒரு சராசரி உறவைக் கூட நாம் வைத்திருக்கவில்லை. இது தான், மிகப் பெரிய காரணம் நாம் "கோடை(விடுமுறை) முகாம்"களை நாடிச் செல்ல! எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது; "என் தாய்" என்னை அடித்து விடும் போதெல்லாம், அடுத்த கணம் நான் இருப்பது என் "அப்பத்தா"வின் மடியில். எங்கள் வீட்டின் கொல்லைப்புறம் கடந்தால், என் அப்பத்தா வீடு. எத்தனயோ உணவு வகைகளை நான் சுவைத்திருப்பினும், ஏன், நானே பல உணவு வகைகளை சமைப்பினும் கூட, "பானையில்" சமைத்த சாம்பாரை சில நாட்கள் கழித்து சுண்டக் காய்ச்சிய, என் அப்பத்தாவின் "பழங்குழம்பிற்கு" இனையானதை நான் இதுவரை சுவைத்ததில்லை. என் அப்பத்தா மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், இதை நான் உணர்ந்து சொல்கிறேன் என்றால், அப்பத்தாவுடனான என்னுடைய உறவு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!!! என் அப்பத்தா, என் அம்மாவை சரியாக நடத்தவில்லை; என் அம்மா மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார் என்பதை என் ஊர்க்காரர்கள் நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் கூட என் அப்பத்தாவை என்னுடன் மட்டுமே உறவுப்படுத்தி பார்க்க எண்ணுகிறேன்; அந்த நிகழ்வுகள் நடக்கும் போது என் அப்பத்தாவிற்கு எடுத்துரைக்க காலம் எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அவர்கள் என்னுடன் உண்மையாய் இருந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை; இது தான் உறவின் வலிமை. 

       என் அம்மத்தாவின் வீடு என்பது "கிலோ மீட்டர்" தள்ளி இருக்கிறது; எங்கள் ஊரே ஓர் கிராமம் எனினும், என் அம்மத்தாவின் கிராமம் அதை விட சிறிய கிராமம். என்பது "கிலோ மீட்டார்" என்பது "எண்பது , தொன்னூறுகளில்" மிகப்பெரிய தூரம்; அதுவும் மூன்று பேருந்துகள் மாறிச் செல்லவேணும் எனில்???. இடைப்பட்ட ஓர் இடத்திலிருந்து அந்த ஊருக்கு செல்ல ஒரே ஒரு "பேருந்து" தான் அதுவும் ஒரு நாளைக்கு மூன்றோ அல்லது நான்கு முறையோ தான் செல்லும்; அதுவும் பல நாட்களில் பல காரணங்களுக்காக கால தாமதம் ஆகும். இதை எல்லாம், பொருட்படுத்தாது அங்கே விடுமுறைக்காய் செல்வேன்(வோம்). என் அம்மா, என் அம்மத்தாவின் வீட்டிற்கு மட்டுமல்ல; அந்த ஊருக்கே மிகுந்த "செல்லமான பெண்மணி"; அந்த காலகட்டத்தில், அத்தனை தூரம் கடந்து திருமணம் செய்து கொண்டு செல்வது சாதாரணம் அல்ல, என்பதால் கூட இது இருக்கலாம். எனவே, எங்களுக்கு (அதுவும், குறிப்பாய் எனக்கு) கிடைக்கும் வரவேப்பிற்கு அளவே இல்லை. உண்மையில், அது மாதிரி ஓர் மகிழ்ச்சி தரும் பயணத்தை இனி என் வாழ்நாளில் செய்வேனா என்பது எனக்கு தெரியவில்லை; அது தான் குழந்தைப் பருவத்தின் மகிமை. இது தான்; இந்த தருணமும், என் அப்பத்தாவின் பழங்குழம்புடன் கூடிய பாசமும் தான் என் குழந்தை பருவத்தில், குறிப்பாய் என் விடுமுறை காலத்தில் எனக்கு கிடைத்த அறிய விசயம் . இதை, இப்போதிருக்கும் சந்ததி முழுதுமாய் இழந்து கொண்டிருப்பதைத் தான் பெருகி வரும் இந்த "கோடை(விடுமுறை) முகாம்"கள் உணர்த்துவதாய் எனக்கு படுகிறது. 

        இது இரண்டு காரணங்களுக்காய் இழக்கப்படுவதாய் எனக்கு படுகிறது. 1. உறவுகள் மேல் நாம் கொண்டிருக்கும் வெறுப்பின் காரணமாய், நம் பிள்ளைகளை உறவுகளிடம் இருந்து பிரித்து வைத்தல்; 2. விடுமுறை காலத்தில் கூட நம் குழந்தைகள், ஏதேனும் ஒன்றை கற்று பிற்காலத்தில் அதிகம் பொருளீட்ட வேண்டும் என்று அவர்களை "பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய்" பார்க்கும் எண்ணத்தினால். காரணம், எதுவாயினும் - அவர்களின் சுதந்திரத்தை, அவர்களின் சந்தோசத்தை - நாம் அழிக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை; பெற்றோர்களே ஆனாலும், கண்டிப்பாய் நமக்கு அந்த அதிகாரம் இல்லை. மேலும், இந்த "அனுபவத்தை" பின் வாழ்நாளில் எத்தனை முயன்றாலும் (எத்தனை  செல்வமிருப்பினும்) ஒருபோதும் அடைய முடியாது. எனவே, நம் விருப்பு வெறுப்புகளை மறந்து நம் செல்வங்களை நம் உறவுகளிடம் உறவாட, குறைந்தது இந்த கோடை விடுமுறையையாவது - ஓர் சந்தர்ப்பமாய் உணர்வோம். என்னை மதிக்கவில்லை, அதனால் என் குழந்தைகளை மதிக்க மாட்டார்கள்; அவர்களை கவனித்து கொள்ள மாட்டார்கள் என்ற தேவை இல்லாத அச்சம் வேண்டாம்!!! "உண்மையில், என் தாயை போல் வேறெவரும் மருதாயின் கொடுமைகளை" சந்திருக்க மாட்டார்கள் என்று நான் முற்றிலும் நம்புகிறேன். ஆனால், என் அப்பத்தா ஒரு போதும் என்னை அந்த கண்ணோட்டத்தில் நடத்தியதில்லை! "கோடை(விடுமுறை) முகாம்" நடத்தும் எவரிடமோ செய்யும் சமரசத்தை நம் உறவுகளிடம் காண்பிப்போம்!!! எனவே, நம் குழந்தைகள் அவர்களின் விடுமுறையை கழிக்கட்டும்...

அப்பத்தா, அம்மத்தா முதலான எல்லா உறவுகளுடன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக