ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

இறைவழிபாட்டில் நேர விரயம் தேவையா?...



          ஏழு வருடங்களுக்கு பிறகு, இந்த வருடம் மாலை அணிந்து கடந்த டிசம்பர் 2011 இறுதியில் சபரி மலைக்கு சென்றிருந்தேன். எப்போதும் போல் அல்லாமல், சிறுவழிப் பாதியிலேயே சென்றேன்; நான் ஒரு மாத கால விடுப்பில்  இந்தியா சென்றிருந்தாதால் - பெருவழிப் பாதையில் சென்று நேரத்தை வீணாக ஆக்கவேண்டாம் என்று எண்ணினேன். ஆனால், கால விரயம் வேறு வழியில் வந்தது; அதுவும் ஒரு நாளுக்கு மேல் வீணாக ஆகிவிட்டது; உடன் என்னுள் ஓர் கேள்வி எழுந்தது. அது - இவ்வளவு நேரம் செலவிட்டு (குறிப்பிட்ட)கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடவேண்டுமா? என்பது தான். இந்த கேள்வி எழுந்தவுடன், என்னை நானே பலமுறை கேள்வி கேட்க ஆரம்பித்தேன். திரும்ப திரும்ப கேட்டதன் விளைவாயும், எனக்கு நிகழ்ந்த இரண்டு அனுபவங்களின் வாயிலாயும்  நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். அது என்ன முடிவு என்பதை அறியும் முன் எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை விளக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த வருடம் சபரிமலை செல்லவே பெரும்பிரச்சனையான சூழல் உருவானது - எனக்கு மட்டுமல்ல; அத்தனை பக்தர்களுக்கும் தான். அது "முல்லைப் பெரியாறு" அணை சம்மந்தமாய் இரு மாநிலங்களுக்கு  இடையே உருவான பதட்டமான சூழல். அது என்னை மிகவும் பாதித்ததால் அது குறித்த என்னுடைய பார்வையை ஒரு கவிதையாய் சபரி மலை செல்லும் முன்பே எழுதியிருந்தேன். நாளுக்கு ஒரு செய்தியாய், ஊடகத்திற்கு ஒரு செய்தியாய், சென்று வந்த பக்தர்களும் ஆளுக்கு ஒரு அனுபவமாய் கூறினார்.

     செல்ல இயலுமா/ இயலாதா என்ற சந்தேகத்துடன் தான் இந்தியா கிளம்பினேன். பெரும்பிரச்சினை என்பது உறுதியானால், என் தாயை வணங்கிவிட்டு அவரிடமே மாலையை கழட்டிவிடுவது என்ற தீர்மானமும் கொண்டேன். என் தாய், எங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு (சதாக்குப்பம் என்ற இடத்தில் உள்ளது) சென்று மாலையை கழட்டலாம் என்ற யோசனையை கூட கூறினார். சந்நிதானம் சென்று வரிசையில் நின்று காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த வருடம் இணைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வசதியின் மூலமாய் தேதியும் நேரத்தையும் பதிவு செய்து வைத்திருந்தோம். ஆனால், சரியாக அன்றைய தினம் பார்த்து, என் முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்ட என் மகள் பள்ளியில் சேர்வதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்திருந்தது. இரண்டு பெற்றோர்களும் இருக்கவேண்டும் என்பது அந்த பள்ளியின் கட்டாய விதி; மேலும், நான் ஊருக்கு சென்றிருந்தது முக்கியமாய் இந்த காரனத்திற்காய் தான். இது தெரிந்ததும், உடனடியாய் வேறொரு தேதிக்கு முன்பதிவு செய்ய முனைந்தபோது, முன்பதிவுகள் அனைத்தும்  முடிந்து போயிருந்தது. உடனே, என்னுடன் வருவதாய் ஒப்புக்கொண்டவர்களிடம் சூழலை விலக்கிவிட்டு, என்னால் அன்றைய தினத்தில் வரமுடியாது; என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டேன்; அவர்கள் என்னுடன் வருவதாய் கூறிவிட்டனர். இந்தியாவுக்கு சென்றபின் சூழலை கேட்டறிந்து, தெரிந்த ஓட்டுனர் ஒருவர் அளித்த உறுதியின் அடிப்படையில் அவரை அழைத்துக்கொண்டு நாங்கள் ஐந்து பெரியவர்களும் ஓர் சிறியவன் உட்பட ஆறு பேர் பயணத்தை துவங்கிவிட்டோம்.

       இந்த தடைகளை எல்லாம் தாண்டி சந்நிதானம் அடைந்து வரிசையில் நிற்க ஆரம்பித்தோம். சரியாய் மதியம் இரண்டரை மணியளவில் வரிசையில் நின்றோம்; ஏழு மணி நேரத்திற்கும் மேலாய் வரிசையில் நின்றும், வரிசை ஐந்நூறு மீட்டர் கூட நகரவில்லை. ஏழு மணி நேரத்தில், ஆறு மணி நேரம் இடைவிடாத கடுமையான மழை; அதிலும் மூன்று மணி நேரத்திற்கு மேலாய் மேற்கூரை எதுவும் இல்லாத வெட்டவெளியில் நின்றிருந்தோம். மழையும் நிற்கவில்லை; வரிசையும் நகரவில்லை. மழை காரணமாய், தரிசனம் பார்த்தவர்கள் கீழே இறங்கமுடியாத சூழல்; எங்கும் பக்தர்கள் கூட்டம். அதனால், வரிசை நகரவில்லை. கூட்டம் அதிகமானதால், நிற்பது கூட சிரமாமனது - மூச்சு விடக் கூட கடினமாய் இருந்தது. நான், தரிசனம் பார்க்கப்போவதில்லை, திரும்ப வாகனத்திற்கு செல்வதாய் கூறினேன். என்னுடன் வந்தவர்களும் அதையே ஆமோதித்து, என்னுடன் வருவதாய் கிளம்பினார்கள். நான் வரும் வழியில், என்னால் முடிந்த அளவிற்கு எல்லோரிடமும் நிகழ்வை விளக்கி, அந்த மாநில மக்கள் தரும் தொல்லைகளையையும் தாண்டி நாம் ஏன் இங்கு வரவேண்டும்? தமிழ்நாட்டிலே ஏராளமான் ஐயப்பன் கோவில்கள் இருக்கு! அதில் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லலாம்!! எல்லோரும் ஐயப்பன் தான், என்றேன்!!! அநேகமாய், அனைவரும் அதை ஆமோதித்தனர். ஒரு குறிப்பிட்ட சதவிகித்தத்தினர் எங்களுடனே திரும்பவும் செய்துவிட்டனர். இதற்கு இடையில், எங்களுடன் வந்த சிறுவனை அவன் தந்தையுடன் குழந்தைகளுக்கான சிறப்பு வழியில் அனுப்பிவிட்டோம்.

         திரும்ப வந்துகொண்டிருந்த வழியில், அம்மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவரை எனக்கு தெரிந்த ஒரு குறுக்குவழியை காண்பித்து, இப்போது அந்த வழியில் செல்லமுடியுமா என்று வினவினேன். அவர், ஏன் திரும்ப செல்லுகிறீர்கள் என்றார்! நான் விளக்கத்தை கூறினேன். உடனே, அவர் மிகவும் வற்புறுத்தி எங்களை முன்பதிவு செய்த வரிசையில் செல்லுமாறு கூறினார். நான் ஏற்கனவே இருந்த விரக்தியில் "இல்லை, நாங்கள் திரும்ப செல்கிறோம்" என்று எவ்வளவு சொல்லியும் கேளாமல், எங்களை மிகவும் வற்புறுத்தி அந்த வரிசையில் அனுப்பிவைத்துவிட்டார். அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல, இங்கே கூறிக்கொள்கிறேன். சந்நிதானம் அடைந்து சாமியை காண நுழைவாயிலை அடைந்த போது, சந்நிதானம் மூடப்பட்டுவிட்டது. திறக்க  இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்றுவிட்டனர்; நான், சரி மீண்டும் திரும்பி விடலாம் என்றேன். ஆனால், அவர்கள் இன்னும் மூன்று மணி நேரம் தானே என்றனர். சரி என்று காத்திருந்து தரிசனம் செய்துவிட்டு வாகனம் அருகே சுமார் காலை ஆறு மணியளவில் வந்தோம். வந்ததும், அடுத்த சோதனை! குழந்தையுடன் சென்றவர் இன்னமும் வரவில்லை; மீண்டும் ஆறு மணி நேரம் காத்திருந்தோம். சரி, அவரை விட்டு-விட்டு கிளம்புவது என்று முடிவெடுத்துவிட்டோம். கிளம்பும்போது, சாதுர்யமாய் எங்கள் ஓட்டுனர் அங்கிருந்த ஓட்டுனர் ஒருவரிடம் அவர் வந்தால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறியிருந்தார். அதன்படியே, பின்னால் வந்த ஒரு வாகனத்தில் அனுப்பிவைத்தார்; அருகில் இருந்த நகரத்தில் இன்னும் மூன்று மணி நேரம் காத்திருந்து அவரை அழைத்துக்கொண்டு வந்தோம்.

    இதற்கு இடையில், நாங்கள் கிளம்பிய அன்றிரவு தான் "தானே" புயலின் கோரத்தாண்டவம் நிகழ்ந்தது. அதன் தாக்கம் அதிகமிருந்த ஒரு நகரமான புதுவையில் தான் என்னவளும், என் மகளும் இருக்கிறார்கள். என் அக்கா கடலூரின் அருகில் வசிக்கிறார். வந்திருந்த மற்றவரின் குடும்பங்கள் சென்னையில் உள்ளது. நாங்கள், தரிசனம் முடித்து கிளம்பியவுடன், அலைபேசியில் தொடர்பு கொண்டால் என்னவள் நடந்தது அனைத்தும் சொல்லி விளக்குகிறாள். என்னுடைய விடுப்பில் மூன்று நாட்கள் வீணானது மட்டுமல்ல; அவர்களுடன் இந்த தருணத்தில் இருக்கமுடியவில்லையே என்ற ஆற்றாமை! அதிலும், ஆங்கில "அடுத்தாண்டு" பிறக்கும் வேலையில் (எனக்கு)பெயர் தெரியாத ஒரு ஊரை தாண்டி வந்துகொண்டிருக்கிறோம். "என்ன வாழ்க்கை இது?" என்று தோன்றியது! இதற்கு இடையில், வரும் வழியில், அலைபேசியில் பேசும் போது என் மகள் அவளின் மழலை மொழியில் அவள் ஆசையாய் வாங்கிய "கிறிஸ்துமஸ்" நட்சத்திர விளக்கு புயலால் அறுந்து சென்று விட்டதை ஆதங்கமாய் கூறினாள். எனக்கு சிரிப்பும் வருகிறது; அவளின் வருத்தமும் புரிகிறது. இந்த புயல், ஒரு சிறுகுழந்தையை கூட பாதித்திருக்கிறதே என்று எண்ணி பார்க்கிறேன்; அவளை பொறுத்த வரையில், அவளுக்கு அது ஓர் பேரிழப்பு தானே. எல்லாம் முடிந்து, அவர்களை சென்று சேர்ந்த பின் என்னை சேர்ந்தது "சளியும் - இருமலும்"; இரண்டு வாரங்கள் மிகவும் சிரமப்பட்டுவிட்டேன். கிட்டத்திட்ட "பன்னிரண்டு" மணி நேரம் மழையில், அந்த காத்திருத்தலின் காரணமாய், நின்றதன் விளைவு. 

        சில வாரங்களுக்கு முன் காத்திருப்பு பற்றி ஓர் அழுத்தமான புதுக்கவிதை வெளியிட, இந்த நிகழ்ச்சி முக்கிய காரணம். சபரிமலை நிகழ்ச்சி நடந்த மூன்று வாரத்தில் திருப்பதி பல்கலைக்கழகத்தில் ஒரு உரை நிகழ்த்துவதற்காய் சென்றிருந்தேன். அப்போது, திருமலை சென்றபோது தரிசனத்திற்காய் ஆறு மணி நேரம் விரயமானது - அதுவும் அதிக பணம் கொடுத்து "சிறப்பு வழியில்" சென்றும்! இவ்விரண்டு நிகழ்வுக்கு பின் தான் அந்த கேள்வி எழுந்தது! இறைவழிப்பட்டிற்கு இவ்வளவு நேர விரயம் அவசியம் தானா? இந்த நேர விரயம் ஒரு பிரசித்திப் பெற்ற கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற என் தவறான கண்ணோட்டத்தால் விளைந்தது. அப்படி ஒரு கோவிலுக்கு சென்றால், அதிக பக்தர்கள் காரணமாயும் அல்லது மேற்கூறிய இயற்கை சீற்றம் காரணமாயும், நேர விரயமாவதை தடுக்க முடியாது. நான் செய்ய வேண்டியது, அதிகம் கவனிக்கப்படாத என்னுடைய குலதெய்வம் போன்ற அமைதியான கோவிலுக்கு செல்லவேண்டும் என்று புரிந்தது. அத்தனை மணி நேரம் விரயம் செய்து, கடவுளை அமைதியாய் அருகிருந்து சில மணித்துளிகள் அல்ல; சில "நிமிடத்துளிகள்" கூட காணமுடியாத வேதனையில் இதயம் கனக்காது. சிலமணித்துளிகள் விரயம் செய்து, இறைவனை (பல)மணிக்கணக்கில் கூட தரிசிக்க முடியும். இதுபோல் அனைவரும் செய்யின், சில கோவில்கள் மட்டும் உயர்வாய் படாது; மேலும், பல கோவில்கள் பக்தர்களற்று வெறிச்சோடி இருக்காது.

     இங்கே ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய தாய், எங்கள் நிலத்தில் ஒரு "புற்றுக்கோவில்" (திருப்பாலப்பந்தல் என்ற ஊரில்) உருவாக்கி இருக்கிறார்; எங்கள் ஊரிலிருந்தும், சுற்றும் உள்ள ஊர்களில் இருந்தும் பலர் அங்கு சென்று வழிபடுகிறார்கள். பொங்கலிட்டு சாமிக்கு படைக்கிறார்கள். என் தாய் எவ்வளவு வற்புறுத்தியும், இது வரை நானே அங்கு சென்று வணங்கியதில்லை; அவர் வற்புறுத்தலுக்காய் தான் சிலமுறை சென்றிருக்கிறேன் - அதுவும் சரியாய் வணங்கியது இல்லை. ஏனோ! இந்த தலையங்கத்தை முடிக்கும் போது அந்த கோவிலுக்கு மனமுவந்து சென்று வழிபட வேண்டும் என்று தோன்றியது. "அருகில் இருக்கும் ஒன்றின் அருமை நமக்கு தெரியாது" என்பது காலகாலமாய் சொல்லப்பட்டு வரப்படும் ஒன்று! அதை நாம் உணராது, நம்மை வற்புறுத்தி - காலவிரயம் செய்து, பிரசித்திப் பெற்ற கோவிலுக்கு சென்றால் தான், கேட்டது கிடைக்கும்/ நடக்கும் என்று நாம் தவறுதலாய் உணர்ந்திருப்பதாய் அல்லது உணர்த்தப்பட்டிருப்பதாய் பட்டது. அதற்காய், இறைவழிபாடே வேண்டாம் - அது உண்மையில்லை, என்ற முடிவிற்கு தவறுதலாய் நான் செல்ல விரும்பவில்லை அல்லது கூற வரவில்லை. மாறாய், நேரவிரயமில்லாத அமைதியான வழியில் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று திடமாய் நம்புகிறேன். அதற்கு நம் அருகில் இருக்கும் ஒரு சிறிய கோவில் கூட போதுமானது. கண்டிப்பாய், இதை உணர்ந்து இத்தலையங்கம் எழுத தான் எனக்கு இந்த நிகழ்வுகள் நடந்ததாய் எண்ணி - மனநிறைவுடன் முடிக்கிறேன்.


கடவுள் அனைவரும் ஒன்றென்றால், கோவிலும் ஒன்று தானே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக