வெள்ளி, நவம்பர் 18, 2011

தமிழை யார் வளர்ப்பது???

     
(என்னை இத்தலையங்கம் எழுத தூண்டிய என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்)

*******

     சென்ற வார இறுதியில் (12.11.2011 அன்று), நண்பர் ஒருவர் "மதிய உணவு" விருந்திற்கு என்னையும் சேர்த்து பல நண்பர்களை அழைத்திருந்தார். அனைவரும் உணவு விருந்து முடிந்தவுடன், வழக்கம் போல் பல்வேறு விசயங்களைப் பற்றி அரட்டையடித்துக் (அலசிக்???) கொண்டிருந்தோம். பேச்சு திடீரென, சமீபத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. நண்பர் ஒருவர், அந்த படத்தின் கதாநாயகி (அவர் ஒரு பெரிய/ பிரபல நடிகரின் மகள்) தமிழ் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். நான், எனக்கு ஒரு சராசரியான, இந்த கால நாகரீகமான பெண்ணைப் போன்று தான் அவரின் பேச்சு இருந்தது; எனக்கு என்னவோ அது தவறாக படவில்லை என்றேன். அவர் இடைமறித்து, அக்கதாநாயகியின் தந்தை தமிழ் பற்றி நிறைய பேசுபவர், தமிழ் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றார்; தொடர்ந்து, அவ்வாறு இருக்கும் ஒருவர் எப்படி தன் மகளை சரியாக உச்சரிக்க வைக்கவில்லை என்றார். நான், சரி உச்சரிப்பு சரியில்லை எனவே வைத்துக் கொள்வோம்; அதில் கோபப்பட என்ன இருக்கிறது? என்றேன். அவர், மீண்டும் இடைமறித்து, இல்லை அந்த நடிகர் தன் மகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்க கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்! இல்லையேல், அவர் தமிழ் பற்றி பேசுவதையும், தமிழ் மேல் தனக்கு அக்கறை உள்ளது என்பதையும் இனிமேல் வெளியில் சொல்லக்கூடாது; மற்றவருக்கு உபதேசம் செய்யக்கூடாது என்றார்!! அதற்கு நான் மறுப்பு சொல்கையில், அப்படியாயின் அவ்வாறு செயல்படும் அரசியல்வாதி குறித்தும் எவரும் பேசக்கூடாது என்றார்.

      நான் அந்த அரசியல்வாதி குறித்தும் இந்த அடிப்படையில் யோசித்ததில்லை எனினும், விவாதம் வேறு கோணத்தில் செல்வதை உணர்ந்து மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றேன்; அவரும் ஒப்புக்கொண்டார். அத்துடன் எங்கள் விவாதமும் முற்றுப்(???) பெற்றது; அதன் பின் தான், மூன்று வாரங்களுக்கு முன் இன்னுமிரண்டு நண்பர்களும் இதே கருத்தை கூறி விமர்சித்தது நினைவுக்கு வந்தது. இது, நினைவுக்கு வந்தவுடன், நான் இதை ஒரு தலையங்கமாய் எழுதவேண்டும் என்று முடிவெடுத்தேன். இது, அவர்களின் விவாதத்திற்கு பதில் சொல்வது அல்ல; அது அவசியமும் இல்லை! எனக்கு தெரிந்த நட்பு வட்டாரத்திலேயே மூன்று நபர்கள் இவ்வாறு சிந்தித்திருப்பின், இன்னும் எத்துனை பேர் இது பற்றி விவாதித்திருப்பர்? அல்லது சிந்தித்திருப்பர்?? இது முற்றிலும் மாறுபட்ட எதிர்மறை விவாதமாய் தோன்றுகிறது; மேலும், ஒருவரின் தமிழ்ப் பற்றை எந்தவொரு அடிப்படையும் இல்லாமால் தவறாய் பேசுவதாய் படுகிறது. ஒருவர், தமிழ் மீது அதிக பற்று கொண்டு தமிழ் கவிதைகளையோ அல்லது வேறு விதமான படைப்புகளையோ படைப்பின், நாம் அவர்களை பாராட்டுகிறோம். அதன் பின், ஏன் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறு செய்யவேண்டுமென விரும்புகிறோம்? அங்ஙனம் நடக்கவில்லை எனின், ஏன் அவர்களை தூற்றுகிறோம்?? இதையும் தாண்டி, ஒருவரின் தமிழ்ப்பற்று பற்றிப் பாராட்டும் போது, அவர்களின் முன்னோர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று ஆராய்வதில்லை; அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூட முயல்வதில்லை.

      அப்படி இருக்கையில், ஏன் அவர்களின் அடுத்த தலைமுறை பற்றி விமர்சிக்க வேண்டும்? இது எனக்கு மிகவும் தவறாக படுகிறது. நான், என் நபருடனான விவாதத்தை முடிக்கும் முன் "என்ன இது, தமிழ் என்பது அவர்கள் குடும்ப சொத்து போல் கேட்கிறீர்களே?; தமிழ் அனைவருக்கும் பொது தானே?? அவர்கள் குடும்பத்தில் அந்த நடிகர் இருக்கிறார்! அது போல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவர் இருப்பின் போதும் தானே???" என்று கூறினேன். அதைத்தான் இன்னும் தெளிவாய் இங்கே விளக்க எண்ணுகிறேன். நாம், எத்தனையோ இதிகாசங்களை படித்திருக்கிறோம் அல்லது அவை பற்றி எவரேனும் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், அதை எழுதியவரின் குடும்பத்தார் அவரைப் பின் தொடர்ந்து எழுதினார்களா? அல்லது எழுதுகிறார்களா?? என்று, என்றும் ஆய்வு செய்ததில்லை. குறைந்த பட்சம், அவர்களின் அடுத்த தலைமுறை(கள்) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளக் கூட முயன்றதில்லை.  அப்படி இருக்கையில், ஒரு நடிகர் தமிழின் மீதான, தன் திறனை காண்பித்து தமிழ் பற்றி பேசும்போது மட்டும் ஏன் இப்படி எதிர்பார்க்கிறோம். அவரின் அடுத்த தலைமுறையும் தமிழ் பற்றுடன் இருக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பில் கூட தப்பில்லை! அது அவ்வாறு இல்லை எனின், ஏன் அவர் கூட தமிழ் பற்றி பேசக்கூடாது என்ற அளவில் யோசிக்கிறோம்? அவர் பொது வாழ்வில் இருப்பதாலா?? இது என்னவோ எனக்கு ஒரு தவறான பார்வையாய் தான் படுகிறது.  இதை இவ்வலைப்பதிவின் மூலம் விவாதிக்கும் போது, என் நண்பர்களையும் சேர்த்து மற்றவர்களையும் சென்றடையும் என்று திடமாய் நம்புகிறேன்.

     நம் வீட்டு குழந்தைகள் இப்படி வரவேண்டும் என முயற்சி செய்கிறோம்; அது நடக்கவில்லை என்றால், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விட்டுவிடுகிறோம். அது போல், அந்த நடிகர் கூட முயற்சித்திருக்கலாம்; வரவில்லை என்றால் அவர் என்ன செய்வார்? அதற்காய், அவர் தமிழ் பற்றி பேசுவது தவறு என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?? தவிரவும், நான் என் நண்பரிடம் மேலும் ஒரு விளக்கத்தையும் கொடுத்தேன்; அது! ஒருவர் பேசும் தமிழுக்கும், அவரின் தமிழ் திறமைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பது. அதற்கு நிகழ்கால உதாரணம் ஒன்றைக் கூட குறிப்பிட்டேன்; அது போல் நிறைய உதாரணங்கள் உள்ளன. அதே போல், உண்மையில், சம்மந்தப்பட்ட அந்த கதாநாயகி (நடிகரின் பெண்) கூட தமிழ்த் திறமை படைத்தவராக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. தவிரவும், அந்த இயக்குநர் சொன்னது போல் கூட அந்த நாயகி அவ்வாறான எளிமையான (யதார்த்தமான) தமிழில் (அதவாது ஆங்கிலம் சார்ந்து) பேசியிருக்கலாம். இதில், அந்த நாயகியையும், அவர் தந்தையையும் குறை கூறுவது எப்படி நியாயமாகும்? இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்; "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" என்ற ஒரு கூற்று உண்டு. கம்பன் வீட்டுத்தறி (அதாவது அவர் குடும்ப உறுப்பினர்கள் என கொள்வோம்) மட்டும் தான் கவி பாடும்/ பாடவேண்டும் என்றில்லை; அடுத்த வீட்டுத்தறி கூட கவி பாடலாம்; தவிரவும், கம்பன் வீட்டுத்தறி கவி பாடவில்லை எனின், கம்பனை குறை கூறுதல் முறையாகாது. 

      இங்கே, எனக்கு இன்னொன்று தோன்றுகிறது! ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது, அதுவும் ஒரு பொதுப்பணியாய் செய்யும் போது, நாம் அவர்களை தொடர்ந்து அதை செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களை நிர்ப்பந்திக்கவும் செய்வதாய் படுகிறது. இது அவர்களின் "குலத் தொழில்" என்று பாவிப்பதாய் படுகிறது. முதலில், நாம் அவர்களின் பொதுப்பணி கண்டு மெச்சுகிறோம்; பிறகு அவர்களை புகழ்கிறோம்; ஒரு காலக்கட்டத்தில், நாம் அவர்கள் அதற்காகவே தோன்றியதை போல் உருவகப்படுத்திக் கொள்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மீதான தங்கள் திறமையை பலரும் (மேற்கூறிய நடிகர் போல்) தங்கள் முழு-நேரத் தொழிலை முடித்த பின் அல்லது கிடைக்கும் நேரத்தில் தான் செய்கிறார்கள். பெரும்பான்மையான புலவர்களும் அவ்வாறே; தங்களின் பனி நேரம் முடிந்த பின்னரே தமிழ்-சேவை செய்கின்றனர். இத்தனைக்கும் இடையிலும், தங்களுடைய தமிழ்த்திறமையை வளர்த்துக்கொண்டு, அதை பிறருக்கு கொண்டு செல்ல முயலும் தமிழ்ப் புலவர்களையும், பிற தொழில் சார்ந்த தமிழன்பர்களையும் முதலில் மதிக்க கற்றுக்கொள்வோம். இங்கே, தமிழை யார் வளர்ப்பது? என்று எந்த நியதியும் இல்லை! இவர் தான் அல்லது இவர்கள் குடும்பம் தான் செய்ய வேண்டும் என்ற நியதியும் கூட இல்லை!! இது அவர்களின் கடமை மட்டுமல்ல, நம் எல்லோரின் கடமையும் கூட. முடிந்தால், தமிழை வளர்க்க நாமும் நம்மால் முயன்றதை செய்வோம்; அல்லையேல், அவ்வாறு செய்பவர்களை முடிந்தவரை ஊக்குவிப்போம்.

வாழ்க தமிழ்! வளர்க அதை வளர்ப்பவர் எண்ணிக்கை!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக